தமிழ்நாடு செய்திகள்

கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்

Published On 2025-06-19 07:58 IST   |   Update On 2025-06-19 11:14:00 IST
  • போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.
  • ரவுடி பென்சில் தமிழரசன் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்.

கரூர்:

கரூர் சின்ன ஆண்டான் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பென்சில் என்கிற தமிழரசன் (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 18-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தமிழரசன் தனது கூட்டாளிகள் பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகியோருடன் சேர்ந்து கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் மலையாளம் என்பவரை மரக்கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கரூர் டவுன் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிரகாஷ் ஹரிஹரன், மனோஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

முக்கிய குற்றவாளியான ரவுடி பென்சில் என்ற தமிழரசன் தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இதற்கிடையே கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரூர் அரிக்காரம் பாளையம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே ரவுடி தமிழரசன் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே உஷாரான கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக் டர் மணி வண்ணன் மற்றும் போலீ சார் ஜீப்பில் சம்பவ இடம் விரைந்தனர். போலீசை கண்டதும் தமிழரசன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார்.

ஆனால் போலீசார் விடாமல் அவனை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீஸ்காரரை தாக்கி விட்டு தப்பி ஓடினார்.

உடனே இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் துப்பாக்கியால் சுட்டார் இதில் அவனது காலில் குண்டு பாய்ந்தது. பின்னர் அவனைப் பிடித்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு ரவுடி தமிழரசனுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரூரில் பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News