தமிழ்நாடு செய்திகள்

மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: சப்-இன்ஸ்பெக்டர் மீது போக்சோ வழக்கு

Published On 2025-07-01 11:19 IST   |   Update On 2025-07-01 11:19:00 IST
  • சப் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
  • சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை:

சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலையில் வீட்டு அருகில் விளையாடிய மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் மாணவியை கண்டுபிடிக்க முடியாமல் உறவினர்கள் திணறி வந்தனர்.

இந்த நிலையில் நுங்கம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் உள்ள ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் ராஜி என்பவரின் வீட்டில் காணாமல் போன மாணவி இருப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்று மாணவியை உறவினர்கள் மீட்டனர். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவிக்கு சப் இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை அளித்து இருப்பதாக கூறி நள்ளிரவில் அவரது வீட்டை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவியின் தாத்தா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி மோதலை தடுத்து நிறுத்தினார்கள்.

இதற்கிடையே இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டு வீடியோவிலும் அதனை பதிவு செய்து வெளியிட்டனர்.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் உயர் போலீஸ் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து மாணவி மீதான பாலியல் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக பெண் போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று இரவு பரபரப்பான தகவல்கள் வெளியான நிலையில் போலீசார் முதலில் இதனை மறுத்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தான் சப் இன்ஸ்பெக்டர் செயல்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் மாணவி மீதான பாலியல் வழக்கில் அதிரடி திருப்பமாக சப்-இன்ஸ்பெக்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, எப்போதும் போல் சிறுமி மீதான பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், விசாரணை முடிவில் தான் மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றிய முழு விவரங்கள் தெரியவரும் எனவும் கூறி உள்ளனர்.

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தியபோது மாலை 6 மணிக்கு பிறகு எனக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. நான் மயக்கமாகி விட்டேன் எனக் கூறியிருந்தார்.

இதனால் மயக்க ஊசி அல்லது மயக்க மருந்து செலுத்தி சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விசாரணை முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் மீது கைது நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மாணவியின் பெற்றோர் மீதும் மாணவியை துன்புறுத்தியதாக வழக்கு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News