பா.ம.க. இளைஞரணி, மகளிர் அணி கூட்டம் - சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை
- டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
- பா.ம.க. மகளிர் அணி தலைவர் சுஜாதா, மாநில செயலாளர் ஆகியோர் கூட்டத்திற்கு வந்தனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று பா.மக. மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதில் பல்வேறு கட்சிப் பணிகள் குறித்து டாக்டர் ராமதாஸ் மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ் 50 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி பெறுவது எப்படி என பா.ம.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினேன் என்றார். இந்த கூட்டத்தில் பா.மக. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பா.மக. எம்.எல்ஏ. சேலம் அருள், பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் போன்ற முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து டாக்டர் ராமதாசிடம் கேட்ட போது, அவருக்கு அழைப்பு கொடுத்துள்ளோம். வரலாம். வந்து கொண்டிருக்கலாம் என பதில் அளித்தார். இந்த கூட்டத்தில் பெரும்பாலான மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் பா.ம.க. மாணவரணி, மகளிர் அணி, இளைஞரணி முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதன்படி இக்கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. மகளிர் அணி தலைவர் சுஜாதா, மாநில செயலாளர் ஆகியோர் வந்தனர். மேலும் விழுப்புரம் பாராளுமன்ற வேட்பாளராக தேர்தலில் நின்ற மாநில மாணவரணி செயலாளர் முரளி சங்கர் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளார்.
கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி வந்தவுடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 2026 சட்ட மன்ற தேர்தலை எப்படி எதிர் கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பான ஆலோசனையை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழங்கினார்.