மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு- நாளை இருதரப்பு பேச்சுவார்த்தை
- பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.
- பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் பேசுகின்றனர்.
பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 23-ந்தேதி இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் கியர் ஸ்டார்மரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எனப்படும் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து இங்கிலாந்து மன்னர் சார்லசை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இங்கிலாந்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று காலை மாலத்தீவு புறப்பட்டு சென்றார். மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.
மேலும், அங்கு வசித்து வரும் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை வரவேற்று கோஷங்கள் எழுப்பினார்கள்.
மாலத்தீவில் நாளை(26-ந்தேதி) 60-வது சுதந்திரதின விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சுதந்திரதின விழா கொண்டாட்டத்தை தவிர பிரதமர் மோடி மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.
பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் பேசுகின்றனர். பல கூட்டு திட்டப்பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். மாலத்தீவு அதிபராக கடந்த 2023-ம் ஆண்டு முகமது முய்சு பதவி ஏற்றார். அதன் பிறகு அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். மாலத்தீவில் இருந்த இந்திய ராணுவத்தினரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
மேலும், சீனாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்தினார்.இதனால் இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் மாலத்தீவு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. அந்த சமயம் இந்தியா மாலத்தீவுக்கு உதவி கரம் நீட்டியது. இந்த உதவியை தொடர்ந்து அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து தன்னை மாற்றிக்கொண்டார்.
இதனால் பிரதமர் மோடியின் இந்த மாலத்தீவு சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முகமது முய்சு அதிபராக பதவி ஏற்ற பிறகு இந்திய தலைவர் ஒருவர் மாலத்தீவு செல்வது இதுவே முதன் முறையாகும். பிரதமர் மோடி 3-வது முறையாக மாலத்தீவு சென்றுள்ளார். மாலத்தீவு பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி நாளை தாயகம் திரும்புகிறார்.