பிளஸ் 2 துணைத்தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு
- பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
- துணைத்தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிட்டார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜூன் 25-ந்தேதி முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும் என்றும் துணைத்தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவே துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் மே 14-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். துணைத்தேர்வு எழுதுவதற்கு பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் அரசுத்தேர்வுகள் சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் மே 13 முதல் 17-ந்தேதி வரை விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.