தமிழ்நாடு செய்திகள்

வைகையில் மிதந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள்!

Published On 2025-08-29 11:45 IST   |   Update On 2025-08-29 11:45:00 IST
  • மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
  • ஆற்று நீரில் மிதந்து வந்த மனுக்களை சேகரித்த போலீசார் அதனை ஆற்றில் வீசியவர்கள் யார்? என விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி மக்களிடம் மனுக்களை பெறும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இம்முகாமில் தரப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஆவணங்களில் பெயர் திருத்தம், பட்டா, சிட்டா உள்ளிட்டவற்றுக்கான மனுக்களை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மக்கள் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் மனுக்கள் மிதப்பதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆற்று நீரில் மிதந்து வந்த மனுக்களை சேகரித்த போலீசார் அதனை ஆற்றில் வீசியவர்கள் யார்? என விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை அருகே கீழடி, கொந்தகை, நெல் முடிகரை, மடப்புரம் பகுதிகளில் நடந்த முகாம்களில் பெற்றப்பட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டுள்ளன. ஆற்றில் மிதக்கும் மனுக்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Tags:    

Similar News