இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்த சென்னை இளைஞர்... யார் இவர்?
- சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ஐஐடி மெட்ராஸில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பை முடித்தார்.
- 2018-ம் ஆண்டில் Open AI-யில் ஆராய்ச்சி பயிற்சியாளராக சேர்ந்தார்.
2025ம் ஆண்டுக்கான ஹூருன் இந்தியாவின் (Harun India) கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி 9.55 லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளார். ரூ. 8.15 லட்சம் கோடியுடன் தொழிலதிபர் அதானி, இந்த ஆண்டு 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் சென்னையைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பரும் இடம்பிடித்துள்ளார். ரூ.21,190 கோடி சொத்துடன் இவர் இந்தப் பட்டியலில் அங்கம் வகிக்கிறார். 'பெர்ப்ளெக்ஸிட்டி' ஏஐ நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமாக இருந்து வரும் இவர், இந்தியாவின் முன்னணி இளம் கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார். ஸ்ரீனிவாஸ், தற்போது தொழில்நுட்ப உலகில், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு துறையில் முக்கிய நபராக உருவெடுத்துள்ளார்.
Harun India பில்லியனர்கள் பட்டியலின்படி, இந்தியாவில் இப்போது 358 பில்லியனர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ஐஐடி மெட்ராஸில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், பெர்க்லியில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
அவரது தொழில்முறை பயணத்தில் முன்னணி AI நிறுவனங்களில் பணியாற்றியதும் அடங்கும். 2018-ம் ஆண்டில், அவர் Open AI-யில் ஆராய்ச்சி பயிற்சியாளராக சேர்ந்தார். அதைத் தொடர்ந்து டீப் மைண்ட் (DeepMind) மற்றும் கூகுளில் பயிற்சி பெற்றார்.
ஸ்ரீனிவாஸ் 2021 செப்டம்பரில் Open AI விஞ்ஞானியாக திரும்பினார். சுமார் ஒரு வருடம் கழித்து, அவர் தனது சொந்த முயற்சிக்கான அடித்தளத்தை அமைக்கத் தொடங்கினார். இது இறுதியில் பெர்ப்ளெக்ஸிட்டி ஏஐ (Perplexity AI) நிறுவ வழிவகுத்தது.