இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - நாளை சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை
- தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 19-ந்தேதி கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று காலை புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வருகிற 21-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கான 'ஆரஞ்சு எச்சரிக்கை' விடுக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்காலில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வருகிற 18-ந்தேதி தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 19-ந்தேதி கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 20-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.