நாங்கள் எடுத்துள்ள கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் 234 தொகுதிகளும் NDA-வுக்கே: நயினார் நாகேந்திரன்
- அண்ணாமலை போன்ற என் மண் என் மக்கள் என்ற மாநில முழுவதுமான சுற்றுப் பயணத்திற்கான காலம் இதுவல்ல.
- ஒரு கட்சியின் கட்டமைப்பு பூத் கமிட்டிதான். அதை வழிப்படுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சங்கரன்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாஜக-வை பொறுத்த வரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அமித் ஷாவுடன் பேசி கூட்டணி தலைவராக அறிவித்திருக்கிறோம். திமுக-வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.
நீங்கள் ஓ. பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? என கேட்கிறீர்கள். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்து பாஜக கூட்டணியில் இருந்து வருகிறார். ஆளுங்கட்சி என்றால் anti incumbency (ஆட்சிக்கு எதிர்ப்பு) 5 சதவீதம் அல்லது 10 சதவீதம் இருக்கும். ஆனால் 100 சதவீதம் anti incumbency இருக்கும் ஒரே கட்சி திமுக.
அண்ணாமலை போன்ற என் மண் என் மக்கள் என்ற மாநில முழுவதுமான சுற்றுப் பயணத்திற்கான காலம் இதுவல்ல. ஒரு கட்சியின் கட்டமைப்பு பூத் கமிட்டிதான். அதை வழிப்படுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். அதற்கே நேரம் சரியாக இருக்கும். அண்ணாமலையின் நடைபயணம் வெற்றியாக அமைந்தது. அதேபோல் பூத் கமிட்டி மாநாடு வெற்றி பாதைக்கு நகர்த்தும். தேசிய ஜனநாயக கூட்டணில் தேமுதிக என்பது குறித்து இனிமேல்தான் பேச்சுவார்த்தை நடக்கும். பாஜகவின் கொள்கை அறிநிலைத்துறை வேண்டாம் என்பதுதான். கோவில் நகையை எடுத்து உருக்குவதாக சொல்கிறார்கள். எவ்வளவு உருக்கினார்கள். எவ்வளவு பெருக்கினார்கள் என்பது இல்லை.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மேலும், திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என கருத்து கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளே என்ற கேள்விக்கு, காசு கொடுத்து எழுதச் சொன்னால் எது வேண்டுமென்றாலும் எழுதலாம். நாங்களும் ஒரு கருத்துக் கணிப்பு எடுத்துள்ளோம். அதில் 234 தொகுதிகளையும் என்.டி.ஏ. கூட்டணி ஜெயிக்கும் என வந்துள்ளது. அதை உங்களுக்கு காட்டட்டுமா?.