தமிழ்நாடு செய்திகள்

காதலர் தினம் கொண்டாட்டத்துக்கு ஏற்ற ஊட்டி லவ்டேல் ரெயில் நிலையம்

Published On 2025-02-14 14:45 IST   |   Update On 2025-02-14 14:45:00 IST
  • ஊட்டி, குன்னூர் நகர பகுதிகளில் மொத்தம் 7 ரெயில் நிலையங்கள் உள்ளது.
  • இந்த ரெயில் நிலையத்தில் பல்வேறு திரைப்படங்களின் காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது.

ஊட்டி:

காதலுக்கு வயது ஒரு தடையில்லை. எந்த வயதில் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் யாருக்கும் காதல் வரலாம்.

ஒருவர் மீது ஒருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதே காதல். அன்பினை வெளிப்படுத்தும் நாளே இந்த காதலர் தினம்.

காதலர்கள் தங்கள் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு சிறந்த இடமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே லவ்டேல் ரெயில் நிலையத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டி ரெயில் நிறுத்தங்களில் ஒன்றான இது சேலம் ரெயில்வே கோட்டத்தின் கீழ் தெற்கு ரெயில்வே மண்டலத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

ஊட்டி, குன்னூர் நகர பகுதிகளில் மொத்தம் 7 ரெயில் நிலையங்கள் உள்ளது. 7 ரெயில் நிலையங்கள் இருந்தாலும் அதில் வித்தியாசமானதாக உள்ளது லவ்டேல் ரெயில் நிலையம்.சுற்றிலும் மரங்கள், மலை முகடுகள், பள்ளத்தாக்குகள் என இயற்கை அழகுடனும், பறவைகளின் கீச் கீச் சத்தம் என எப்போதும் கண்களுக்கு இனிமையாகவும், அமைதியான சூழ்நிலையில் இந்த ரெயில் நிலையம் காட்சியளிக்கிறது.

இதுமட்டுமின்றி அனைவரும் சுற்றுலா வருவதற்கு ஏற்ற இடமாகவும் இது விளங்குகிறது.

மற்றொரு சிறப்பு ரெயில் நிலையத்தின் கட்டிடக்கலை. இந்த ரெயில் நிலையம் 1854-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த ரெயில் நிலையம் இன்றும் அப்படியே பழமை மாறாமல் காட்சியளித்து கொண்டிருக்கிறது. இந்த ரெயில் நிலையத்தில் பல்வேறு திரைப்படங்களின் காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது. 1854 முதலே இந்த இடம் லவ்டேல் என அழைக்கப்பட்டு வருகிறது. 1916-ம் ஆண்டு ஊட்டியில் உள்ள மிகச் சிறந்த அழகான பகுதியாகவும் இது திகழ்கிறது. 19-ம் நூற்றாண்டின் அழகு எனவும் வர்ணிக்கப்படுகிறது.

இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் திகழும் இந்த ரெயில் நிலையத்தை காதலர் தினம் கொண்டாடும் இடமாக மாற்ற வேண்டும் என பாரம்பரிய நீராவி அறக்கட்டளை(எச்.எஸ்.சி.டி.) கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக எச்.எஸ்.சி.டி நிறுவனர் கே.நடராஜன் கூறியதாவது:-

காதலர் தினம் என்பது உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்தக் கூடிய நாள் அல்ல. இது நட்புணர்வையும், ரசிப்புத் தன்மையையும் கொண்டாடும் தினமாகவும் உள்ளது.

இந்த தினத்தை கொண்டாடுவதற்கு சிறந்த இடமாக இந்த லவ்டேல் ரெயில் நிலையம் உள்ளது.

சிறந்த சுற்றுலா தலமாக உள்ளதால், இந்த ரெயில் நிலையத்தை காதலர் தினம் கொண்டாடும் இடமாக மாற்ற வேண்டும்.

அவ்வாறு மாற்றம் செய்து, அனைவரும் அமர்ந்து உணவு அருந்தி கொண்டு பேசும் வகையில் இருக்கைகள் அமைக்க வேண்டும். கலாசார நிகழ்ச்சிகளையும் இங்கு நடத்தலாம். அதுமட்டுமின்றி, நீலகிரியில் விளையக் கூடிய பொருட்களையும் விற்பனை செய்யும் சூழல் உருவாகும். எனவே தெற்கு ரெயில்வே இந்த ரெயில் நிலையத்தை காதலர் தினம் கொண்டாடும் இடமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News