வடகிழக்கு பருவமழை 23-ந்தேதி முதல் மீண்டும் தீவிரம் அடையும்- வானிலை ஆய்வாளர்கள் தகவல்
- தாழ்வுப்பகுதி காரணமாக வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும்.
- டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தமிழ்நாட்டில் பரவலாக மழையை கொடுத்து சென்றே அரபிக்கடல் பகுதியில் இந்த தாழ்வுப் பகுதி வலு இழக்க இருக்கிறது.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து சென்றது. இது நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு கிழக்கே வந்தடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அதன்பின்னர், 23-ந்தேதி (திங்கட்கிழமை) டெல்டா-வட இலங்கையையொட்டி நகர்ந்து சென்று, அதற்கு அடுத்த நாள் (24-ந்தேதி) பாக்நீர் இணைப்பு அல்லது டெல்டா பகுதிகள் வழியாக உள்ளே நுழைந்து அரபிக்கடலை சென்றடைய இருக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தாழ்வுப்பகுதி காரணமாக வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும். அதனைத்தொடர்ந்து டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தமிழ்நாட்டில் பரவலாக மழையை கொடுத்து சென்றே அரபிக்கடல் பகுதியில் இந்த தாழ்வுப் பகுதி வலு இழக்க இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக லட்சத்தீவு பகுதியில் இருந்து வரும் நிகழ்வு, சுமத்ரா தீவில் இருந்து வரும் நிகழ்வு ஒன்றிணைந்து 26-ந்தேதி மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வாளர் நா.செல்வக்குமார் தெரிவித்தார். இது மேலும் தமிழக பகுதிகளை நோக்கி நகர்ந்து, 28-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை மழையை கொடுக்கக்கூடிய நிகழ்வாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.