அடுத்தடுத்து 2 காற்றழுத்தம் - வடமாவட்டங்களில் 2 வாரங்களுக்கு கனமழை
- வருகிற 21-ந்தேதி உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 23-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய உள்ளது.
- வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி இருப்பதால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தீபாவளி தினத்திலும் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த 10 நாட்களுக்குள் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். வருகிற 24-ந்தேதி உருவாக இருப்பதாக கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே தீபாவளிக்கு மறுநாள் உருவாவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி மேலும் தீவிரம் அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தீபாவளி நாளில் இருந்தே சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் அடுத்த 2 வாரங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதன் பின்னர் வருகிற 27-ந்தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். அந்தமான் கடல் பகுதியில் உருவாக உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 29-ந்தேதி அன்று தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாகவும், அது புயலாக மாறுவதற்கான சூழல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
வருகிற 21-ந்தேதி உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 23-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய உள்ளது. இது 22-ந்தேதியில் இருந்து 25-ந்தேதிக்குள் தெற்கு ஆந்திர மற்றும் வடதமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதனால் 21-ந் தேதி முதல் 25-ந்தேதி வரையில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் இரண்டாம் சுற்று பருவமழை தீவிரமடையும்.
சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான வடகடலோர பகுதிகள், காவிரி டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும். வடதமிழகம், காவிரி டெல்டா பகுதிகள், தென்மாவட்டங்கள் ஆகியவற்றிலும் பருவமழை படிப்படியாக தீவிரம் அடையும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், பக்கத்து மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
இப்படி வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி இருப்பதால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.