இனிமேல் அட்டை தேவையில்லை, கைரேகையும் வைக்க வேண்டாம்: டிஜிட்டல் ஆதார் செயலி அறிமுகம்
- அனைத்து சேவைகளிலும் ஆதார் அட்டை தவிர்க்க முடியாத ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்த செயலியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
இந்தியர்களின் வாழ்க்கையில் ஆதார் அட்டை அத்தியாவசிய அடையாள ஆவணமாக மாறியுள்ளது. அரசு வழங்கும் பல நலத்திட்டங்கள் முதல் வங்கி கணக்கு தொடங்குதல், பான்கார்டு பெறுதல், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், செல்போன் நம்பர் வாங்குதல் வரை அனைத்து சேவைகளிலும் ஆதார் அட்டை தவிர்க்க முடியாத ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை பொதுமக்கள் ஆதாரை பயன்படுத்துவதற்கு அதனை தங்களுடன் பிளாஸ்டிக் கார்டு வடிவில் எடுத்துச் செல்ல வேண்டி இருந்தது. அல்லது ஆதார் இணையதளத்தில் உள்ள ஆதார் 'பிடிஎப்' பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. சில சமயங்களில் ஆதார் அட்டை இல்லாமல் இருந்தால் அல்லது இணையதளம் இல்லாத சூழலில் அதனை பதிவிறக்கம் செய்ய முடியாவிட்டால், நமது அடையாளத்தை ஆதார் மூலம் உறுதி செய்வது பிரச்சனையாக இருந்தது.
இந்த நிலையை மாற்றி, டிஜிட்டல் ஆதார் பயன்படுத்த இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் (Aadhaar App) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆதார் பயன்பாட்டை இன்னும் எளிமையாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை நாம் பதிவிறக்கம் செய்து, அதில் நமது ஆதார் எண்ணை பதிவு செய்து முக அங்கீகாரம் முறை செய்ய வேண்டும். அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் நமது ஆதார் விவரங்கள் அதில் வந்துவிடும்.
நாம் இனி செல்போன் எண் பெறுவது, வங்கி கணக்கு தொடங்குவது, ஓட்டலில் தங்குவதற்கு ஆதார் அட்டை நகல் கொடுப்பது அல்லது கைரேகை எல்லாம் இனி வைக்க வேண்டாம். அந்த செயலியில் உள்ள 'கியூஆர்' கோடு காண்பித்தால் போதுமானது அல்லது அவர்கள் காட்டும் 'கியூஆர்' கோட்டினை ஸ்கேன் செய்தால் போதும். அதன் மூலம் நமது ஆதார் எண்ணை கூட அவர்களால் பார்க்க முடியாது.
இந்த செயலியில் நமது ஆதார் மட்டுமின்றி ஒரே செல்போன் எண் உள்ள நமது குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 5 பேர் ஆதார் விவரங்களை அதில் பதிவு செய்து கொள்ள முடியும். இந்த செயலியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முக அங்கீகாரம், 6 இலக்க பின் டிஜிட்டல் பாஸ்வேர்டு, ஆதார் பயோ மெட்ரிக்கை லாக் செய்யவும், ஆன் செய்யவும் வசதிகள் ஆகியவையும் உள்ளன. இணையதள வசதிகள் இல்லாத நேரங்களில் கூட இந்த செயலியை பயன்படுத்த முடியும். இந்த புதிய செயலி, ஆதார் சேவைகளை பொதுமக்களுக்கு மேலும் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்தும் வழியை திறந்து இருக்கிறது.