கவர்னர் வருகையின் போது பாதுகாப்பு பணியில் இருந்த போதை போலீஸ்- மட்டையான வீடியோ வைரலானதால் பரபரப்பு
- மது போதையில் இருந்த அந்த போலீஸ்காரர் சேரில் அமர்ந்தபடியும் தள்ளாடிய நிலையில் அமர்ந்திருந்தார்.
- பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று நடைபெற்ற அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நேற்று மாலை கொடைரோடு வழியாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து தரைவழி மார்க்கமாக வாடிப்பட்டி வழியே கொடைரோடு பயணியர் விடுதிக்கு வந்தடைந்தார். அங்கு மாவட்ட கலெக்டர் சரவணன் மற்றும் எஸ்.பி. பிரதீப் ஆகியோர் கவர்னர் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதன் பின் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானல் சென்றார். இந்நிலையில் கொடைரோடு, அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பாதுகாப்பு பணியில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த நிலக்கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட விளாம்பட்டியைச் சேர்ந்த அபிமன்யு என்ற போலீஸ்காரர் சீருடையில் மது போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தார்.
பின்னர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனை கவனித்த அருகில் இருந்த மற்ற போலீசார் அவரை கைத் தாங்கலாக அழைத்து சென்று சாலையோரத்தில் இருந்த ஒரு வாகனத்தின் மறைவில் சேர் போட்டு அமர வைத்தனர். மது போதையில் இருந்த அந்த போலீஸ்காரர் சேரில் அமர்ந்தபடியும் தள்ளாடிய நிலையில் அமர்ந்திருந்தார். இதனை அந்த வழியில் சென்ற பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
கவர்னர் வருகையின் போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் காலை முதலே மது போதையில் இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.