தேநீர் விருந்து அளித்த நயினார் நாகேந்திரன்- அமித் ஷா அதிருப்தி
- நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு வந்த அமித் ஷாவுக்கு மங்கள இசையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- மாநாட்டில் பங்கேற்ற வயது முதிர்ந்த பெண்கள் உண்மையிலேயே பூத் கமிட்டியினர் தானா என்று அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார்.
நெல்லை தச்சநல்லூரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி தென்மண்டல பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.
இதற்கிடையே, அமித்ஷாவுக்கு, பாளையங்கோட்டை பெருமாள்புரம் புனித தாமஸ் தெருவில் உள்ள பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பிரபல தனியார் ஓட்டலில் இருந்து தேநீர் விருந்துக்கான உணவு பொருட்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. அமித்ஷாவுக்காக திருநெல்வேலி அல்வா, குழிப்பணியாரம், லட்டு, ரோஸ் பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளும், தட்டாம் பயிறு, சுண்டல், வேர்கடலை போன்ற பயிர் வகைகள், பில்டர் காபி, டீ, லெமன் டீ, கிரீன் டீ ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாக 35 உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு இருந்தன.
மாலை 5.35 மணிக்கு நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு வந்த அமித்ஷாவுக்கு மங்கள இசையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அண்ணாமலையை அமித்ஷா கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார். தொடர்ந்து அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இதில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, இளைஞர் அணி துணை தலைவர் நயினார் பாலாஜி, நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் முத்துபலவேசம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தேநீர் விருந்திற்கு மூத்த நிர்வாகிகள் அழைக்கப்படாததால் அதிருப்தியடைந்த அமித்ஷா நயினார் நாகேந்திரனை கடிந்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமித்ஷாவின் அதிருப்திக்கான காரணம்:
* தேநீர் விருந்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர்களை ஏன் அழைக்கவில்லை. மூத்த நிர்வாகிகளை அழைத்து ஒன்றாக அமர்ந்து பேசும்போதுதான் கட்சி, கள நிலவரம் தெரிய வரும்.
* நெல்லை பூத் கமிட்டி மாநாட்டில் தான் பேசிக்கொண்டிருந்தபோது வெளியில் எழுந்து சென்றவர்கள் யார்?
* மாநாட்டில் பங்கேற்ற வயது முதிர்ந்த பெண்கள் உண்மையிலேயே பூத் கமிட்டியினர் தானா?
* நான் பங்கேற்கும் நிலையில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வருக வருக என பேனர்கள் வைத்தது ஏன்? என்று அமித்ஷா கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.