தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும் - நயினார் நாகேந்திரன்

Published On 2025-04-19 14:44 IST   |   Update On 2025-04-19 14:44:00 IST
  • காவல்துறை தி.மு.க. கட்டுப்பாட்டில் உள்ளது.
  • தி.மு.க. ஆட்சி பல்வேறு ஊழல்களை செய்துள்ளது.

சேலம்:

பா.ஜ.க. கட்சியின் சேலம் பெருங்கோட்டம் சார்பில் ஓமலூரில் பா.ஜ.க. புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில துணைத்தலைவருமான கே.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

பா.ஜ.க. தொண்டர்கள் பேஸ்புக், எக்ஸ், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். தற்போது காவல்துறை தி.மு.க. கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் எப்படி வேண்டுமென்றாலும் வழக்குப்பதிவு செய்வார்கள். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முன்னாள் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் 'பாத யாத்திரை' நடத்தி கட்சியை வளர்த்தார். அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற முறையில் பாத யாத்திரை நடத்தி கட்சியை வலுப்படுத்தினார்.

தமிழகத்தில் தாமரை மலர்ந்து தீரும். இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும். நாம் அமைத்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணி. மிகப்பெரிய கூட்டணி. ஒரு சிலர் சந்தர்ப்பவாத கூட்டணி என கூறுகிறார்கள். ஆனால் இதுதான் நியாயமான கூட்டணி. எனவே தேசிய ஜனநாயக ஆட்சி வருவதற்கு பக்கபலமாக இருக்க வேண்டும். பலர் இந்த கட்சிக்காக உயிரை தியாகம் செய்துள்ளனர்.

ஆடிட்டர் ரமேஷ் போன்றவர்கள் தியாகம் செய்ததால் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளோம். இன்றிலிருந்து சபதம் ஏற்க வேண்டும். கூட்டணி வெற்றி பெற எத்தனை சீட் என்பதை நான் முடிவு செய்ய முடியாது. ஏன் என்றால் தேசிய தலைமை முடிவு செய்யும். தேசிய தலைமை ஜெ.பி.நட்டாவும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவு செய்வார்கள்.

தி.மு.க. ஆட்சி பல்வேறு ஊழல்களை செய்துள்ளது. இதை மறைப்பதற்காக நீட் தேர்வு, மாநில சுயாட்சி எனவும், கடந்த 50 ஆண்டுகளாக மேகதாது பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை என வெறும் தீர்மானங்கள் மட்டுமே போட்டு விட்டு சென்று விட்டனர். 18 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்திலிருந்த தி.மு.க. அப்போது இதற்கு தீர்வு கண்டு இருக்க வேண்டும். நிச்சயமாக ஆட்சி மாற்றம் இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

Similar News