தாய் மொழியில் பேசுங்க... இந்தியை தவிர்க்க சொன்ன நயினார் நாகேந்திரன்
- இனி வரக்கூடிய தேர்தலில் 40 இடங்களுக்கு மேல் நாம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
- தேர்தல் கூட்டணி வைத்ததும் ஒரு கருத்துக்கணிப்பு வரும்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். தலைவர் பதவியேற்பு விழா நிகழ்ச்சி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பேசினர். அப்போது தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் அரவிந்த் மேனன் இந்தியில் பேசினார். இதையடுத்து பேசிய நயினார் நாகேந்திரன், மாநிலத்தின் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஜி... அவர் மலையாளத்தில் பிறந்தாலும் இந்தியில் தான் பேசினார். மலையாளத்தில் பேசியிருந்தால் இன்னும் மக்களுக்கு நன்றாக புரிந்து இருக்கும். அடுத்த முறை வரும்போது உங்கள் தாய்மொழியான மலையாளத்திலேயே பேசுங்கள். இனி வரக்கூடிய தேர்தலில் 40 இடங்களுக்கு மேல் நாம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அண்ணாமலை அவர்கள் மிகச்சிறப்பான வகையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுப்பது என்றாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி அவர்களது பாணி என்பது ஒரு பாணி. என்னுடைய விஷயம் என்பது வேறு. அவர் புயலாக இருந்தால் நாம் தென்றலாகத்தான் இருக்க முடியும்.
தேர்தல் கூட்டணி வைத்ததும் ஒரு கருத்துக்கணிப்பு வரும். போக போக பல மாற்றங்கள், நிகழ்வுகள் நடக்கும். அதை பொறுத்து மக்களின் மனநிலையும் மாறும். ஆக தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை முடிந்ததும்தான் அது வெற்றிக் கூட்டணியா? வெத்துக் கூட்டணியா? தெரியும்.
கருணாநிதி பா.ஜ.க.வை பண்டாரம், பரதேசி கட்சி என்றார். 1998-ல் ஜெயலலிதா பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். 1999-ல் கருணாநிதியே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தார். அப்போதும் வெற்றி பெற்றார்கள். வெற்றிக்கூட்டணியை நானோ, கருத்துக்கணிப்போ, பத்திரிகையாளர்களோ கணிக்க முடியாது. அப்படி கணித்தாலும் அது மாயையே என்றார்.