தமிழ்நாடு செய்திகள்

நான் பிரதமரை சந்திப்பதில் நயினார் நாகேந்திரனுக்கு விருப்பமில்லை- ஓ.பி.எஸ். பரபரப்பு அறிக்கை

Published On 2025-08-02 21:04 IST   |   Update On 2025-08-02 21:04:00 IST
  • நயினார் நாகேந்திரன் அவர்கள் எனது அழைப்பை எடுக்கவில்லை.
  • பாரதப் பிரதமர் அவர்களை சந்திக்க அனுமதி கேட்டு 24-07-2025 அன்று நான் கடிதம் எழுதினேன்.

"தன்னிடம் சொல்லி இருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்ததில் எள்ளளவும் உண்மை இல்லை என்று NDA கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள்,"தன்னிடம் சொல்லியிருந்தால் மாண்புமிகு பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்"என்று தெரிவித்துள்ளார்.

இதில் எள்ளளவும் உண்மை இல்லை. எனவே, இது குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது என் கடமை.

நயினார் நாகேந்திரன் அவர்களை ஆறு முறை கைபேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், நயினார் நாகேந்திரன் அவர்கள் எனது அழைப்பை எடுக்கவில்லை.

எனவே, நயினார் நாகேந்திரன் அவர்களிடம் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும், நயினார் நாகேந்திரன் அவர்கள் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான இரா. வைத்திலிங்கம் மற்றும் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோரை கலந்தாலோசித்த பின்னர், பாரதப் பிரதமர் அவர்களை சந்திக்க அனுமதி கேட்டு 24-07-2025 அன்று நான் கடிதம் எழுதினேன்.

அந்தக் கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது.

உண்மையிலேயே, நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு பிரதமர் அவர்களை நான் சந்திக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்குமேயானால், நான் கைபேசியில் அழைத்த அழைப்பை பார்த்தோ அல்லது குறுஞ்செய்தியின் அடிப்படையிலோ என்னிடம் பேசியிருக்கலாம்.

அல்லது எனது கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கலாம். ஆனால் எதையும் செய்யவில்லை.

இதிலிருந்து, நான் பிரதமர் அவர்களை சந்திப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. எனவே, பிரதமர் அவர்களைச் சந்திப்பது தொடர்பாக நான் நயினார் நாகேந்திரன் அவர்களிடம் சொல்லவில்லை என்பது சரியல்ல, உண்மைக்கு புறம்பானது.

நயினார் நாகேந்திரன் அவர்கள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கிறார். ஆகவே, இனியாவது அவர் உண்மை பேச வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News