மரக்காணத்தில் மோட்டார் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி எரித்த மர்ம நபர்- போலீசார் விசாரணை
- மோட்டார் சைக்கிள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த நிலையில் இருந்தது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மரக்காணம்:
மரக்காணம் சால்ட் ரோட்டில் வசிப்பவர் அஸ்கர் அலி (51). இவர் மரக்காணம் புதுவை சாலையில் பாத்திரக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு அஸ்கர் அலி வழக்கம் போல் தனது பாத்திரக் கடையை மூடிவிட்டு தனக்கு சொந்தமான விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வீட்டின் எதிரில் நிறுத்தி விட்டு குடும்பத்துடன் வீட்டில் தூங்க சென்றார்.
இந்நிலையில் இன்று காலையில் எழுந்து அஸ்கர் அலி வெளியில் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளை பார்த்து உள்ளார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த நிலையில் இருந்தது.
இதனைப்பார்த்து அஸ்கர் அலி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து அஸ்கர் அலி மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த மர்ம நபரை கண்டுபிடிக்க அந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.