தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் எப்போதும் அமித் ஷா அலை வீசாது - எம்.பி. மாணிக்கம் தாகூர்

Published On 2026-01-06 10:14 IST   |   Update On 2026-01-06 10:14:00 IST
  • ஜனவரி 30-ந் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும்.
  • கூட்டணி ஆட்சி என்ற டி.டி.வி. தினகரனின் கருத்தை வரவேற்கிறேன்.

விருதுநகர்:

விருதுநகர் வி.வி.எஸ் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்ததைக் கண்டித்து வருகிற 11-ந் தேதி விருதுநகர் ரெயில் நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இதில் நானும், சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். வருகிற 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் உள்ள மக்களை சந்தித்து விளக்க கூட்டங்கள் நடைபெறும்.

ஜனவரி 30-ந் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும். பிப்ரவரி 7-ந் தேதி மேல் 15-ந் தேதி வரை மாநில அளவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள், பேரணிகள் நடைபெறும்.

தமிழகத்திற்கு வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கூடுதல் சீட்டுகள் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களை மிரட்டி வருகிறார். பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் ஆர்.எஸ்.எஸ் குழந்தைகள். அமித் ஷா அலை பட்டிதொட்டி எல்லாம் பரவுவதாக அண்ணாமலை கூறுவது அவருக்கே நியாயமாக உள்ளதா? அமித் ஷா அலை தமிழகத்தில் எப்போதும் வீசாது.

கூட்டணி ஆட்சி என்ற டி.டி.வி. தினகரனின் கருத்தை வரவேற்கிறேன். தேசிய அளவில் கூட்டணி ஆட்சி இருப்பது போல மாநில அளவிலும் கூட்டணி ஆட்சி அவசியம். ஆர்.எஸ்.எஸ்.-ஐ. நேருக்கு நேராக எதிர்ப்பது காங்கிரஸ் தான்.

முடிந்துபோன ஆர்.எஸ்.எஸ். குரலை எதிரொலிக்கிறார் என என்னை பற்றி தி.மு.க., முன்னாள் எம்.பி. அப்துல்லா கூறியது கண்டிக்கத்தக்கது. அவர் மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும்.

கூட்டணி கட்சிகள் இணைந்து தான் தமிழகத்தில் ஒரு கட்சியை வெற்றி பெறச் செய்யும் நிலை உள்ளது. காங்கிரஸ் கட்சி டில்லியில் அதிகாரத்தில் பங்கு தர தயாராக உள்ளது. தமிழ கத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சிக்கு அதிகார பகிர்வு வேண்டும் என காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரீஷ் சோடேங்கர் கூறியது போல் கூட்டணி ஆட்சி அவசியம். இதை காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகையும் ஆமோதிக்கிறார். வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியின் ஓட்டு தேவையாக உள்ள போது, எப்படி கூட்டணியில் பங்கு தராமல் இருக்கலாம்.

இந்தியா கூட்டணியில் சி.பி.எம்.க்கு அமைச்சரவையில் இடம் வேண்டாம் என கூறினால் அது அவர்களது விருப்பம். ஆனால் எங்களுக்கு ஆட்சியில் அதிகாரம் வேண்டும். கருத்துக் கணிப்பு கூட்டணி ஆட்சியின் திசையை காட்டி உள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் தான் ஆட்சி அமைப்பார்.

கூட்டணி பற்றி கார்கே அமைத்த குழுவினர், தி.மு.க.வுடன் நடத்திய முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவு பெற்றுள்ளது. ராகுல் ஒரு போதும் ஆர்.எஸ்.எஸ்., உடன் சமாதானம் ஆகமாட்டார். அதனால் தான் எல்லோரும் எங்களுடன் கூட்டணி விரும்புகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News