தமிழ்நாடு செய்திகள்

பேரீச்சம்பழத்தில் கஞ்சா - சிறை கைதியான மகனுக்கு கொடுக்க முயன்ற தாய் கைது

Published On 2025-09-16 12:32 IST   |   Update On 2025-09-16 12:42:00 IST
  • சுமார் 3 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
  • லலிதா மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் சிறைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை:

நெல்லை, அம்பாசமுத்திரம் தாலுகாவை சேர்ந்த லலிதா என்பவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவல் கைதியாக இருக்கும் தனது மகன் வினோத்தை பார்ப்பதற்காக வந்துள்ளார்.

சிறை விதிமுறைகளின்படி, கைதிக்கு கொடுப்பதற்காக அவர் கொண்டு வந்திருந்த பிஸ்கட், கடலைமிட்டாய், ஊறுகாய் மற்றும் பேரீச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களை சிறைக் காவலர்கள் சோதனை செய்தனர்.

ஏட்டு கண்ணன் தலைமையிலான சிறைக்காவலர்கள் நடத்திய சோதனையின்போது, பேரீச்சம்பழங்களில் சிலவற்றின் கொட்டைகள் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக சுமார் 3 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சிறை அலுவலர் முனியாண்டி, பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கஞ்சாவை மறைத்து கொண்டு வந்து சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருளை கடத்த முயன்ற குற்றத்திற்காக லலிதா மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் சிறைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கைது செய்யப்பட்ட லலிதாவின் மகன் வினோத், ஏற்கனவே கடையம் போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, கடந்த மார்ச் மாதம் முதல் சிறையில் இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News