தமிழ்நாடு செய்திகள்

ராமதாஸ் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் புறக்கணித்தனர்?

Published On 2025-05-16 10:55 IST   |   Update On 2025-05-16 10:55:00 IST
  • கட்சிக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் உழைக்காவிட்டால் யாராக இருந்தாலும் பதவி பறிக்கப்படும்.
  • கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

திண்டிவனம்:

பா.ம.க. சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவராக தனது பேரன் பரசுராமன் முகுந்தனை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.

இதற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் மேடையிலே மோதல் வெடித்தது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பா.ம.க. தலைவராக நானே செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் என அறிவித்தார். இந்த அறிவிப்பு அன்புமணி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி மாமல்லபுரம் அருகே பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் செயல்கள் குறித்து கடுமையாக எச்சரித்து பேசினார்.

கட்சிக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் உழைக்காவிட்டால் யாராக இருந்தாலும் பதவி பறிக்கப்படும். அது எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் சரி என்று கூறினார்.

மேலும் கட்சியில் நான் தான். நான் இருக்கும் வரை நான் எடுப்பது தான் முடிவு என்றும் கூறினார். அவரது இந்த பேச்சு மீண்டும் அன்புமணி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும். இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று சமூக வலைதளத்தில் டாக்டர் ராமதாஸ் பதிவு செய்தார்.

அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

பா.ம.க.வுக்கு 92 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் உள்பட 10 மாவட்ட முக்கிய தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மட்டும் கலந்து கொண்டு உள்ளனர். மற்ற மாவட்ட தலைவர்கள் தற்போது வரை கூட்டத்திற்கு வரவில்லை.

இதனால் பெரும்பாலான பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் டாக்டர் ராமதாஸ் ஏற்பாட செய்த இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இது பா.ம.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாசும் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையே நாளை மகளிர் அணி, மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 7 நாட்களுக்கு பா.ம.க. அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிய வந்துள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று காலை முதலே பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் வந்து சேர்ந்தனர். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

Tags:    

Similar News