தமிழ்நாடு செய்திகள்

'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

Published On 2025-08-19 12:38 IST   |   Update On 2025-08-19 14:47:00 IST
  • இத்திட்டத்தில், 155 பயனாளிகளுக்கான திட்ட செலவினமாக ரூ.24.43 கோடி, 30 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும்.
  • இறுதியாக தொழில் தொடங்குவதற்கு தேவைப்படும் கடனுதவி சம்பந்தப்பட்ட வங்கிகளால் கடன் இறுதி ஒப்பளிப்பு அளிக்கப்படும்.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கடந்த 2024-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தாய்நாட்டிற்காகத் தங்களது இளம் வயதை ராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப் பான வாழ்க்கையை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், "முதல்வரின் காக்கும் கரங்கள்" என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் முன்னாள் படைவீரர்களின் நலனிற்காக "முதல்வரின் காக்கும் கரங்கள்" என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 155 முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கிடும் பொருட்டு அடையாளமாக 15 முன்னாள் படைவீரர்களுக்கு ஆணைகளை வழங்கினார். இத்திட்டத்தில், 155 பயனாளிகளுக்கான திட்ட செலவினமாக ரூ.24.43 கோடி, 30 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் சுயதொழிலில் ஈடுபடவும் மற்றும் சிறந்த தொழில் முனைவோர்களாக மாற்றிட தேவையான நிதி மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் முதற்கட்டமாக 348 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பயனடைவர். இத்திட்டத்திற்கான மொத்த செலவினம் 50 கோடியே 50 லட்சம் ரூபாயாகும்.

இந்த திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்கள் பல்வேறு தொழில் தொடங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் வரையில் வங்கியின் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டு, தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். மேலும், பயனடைவோருக்கு மூலதன மானியம் மற்றும் வட்டி மானியம் வழங்கப்படுவதால் கடன் சுமை குறையும்.

இந்த திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை கூர்ந்தாய்வு செய்வதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்ட மாவட்ட அளவிலான தேர்வு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வங்கிக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் ஒப்புதல் வேண்டி பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வங்கிகளால் மேலும் சீராய்வு செய்யப்பட்டு தற்காலிக ஒப்புதல்ஆணை வழங்கப்படும்.

தொழில் தொடங்குவதற்கான வங்கியின் தற்காலிக ஒப்புதல் பெற்றவர்களுக்கு அரசு செலவில் சென்னை- தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் தொழில் முனைவோர் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படும். இறுதியாக தொழில் தொடங்குவதற்கு தேவைப்படும் கடனுதவி சம்பந்தப்பட்ட வங்கிகளால் கடன் இறுதி ஒப்பளிப்பு அளிக்கப்படும்.

வருங்காலங்களில் தமிழ் நாடு அரசு, நிதி நிறுவனங்களுடன் இணைந்து 500 முன்னாள் படைவீரர்கள் பயனடையும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், சிறப்பு செயலாளர் மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை இயக்குநர் சஜ்ஜன்சிங் ரா சவான் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள 45 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பொதுப்பணித்துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தின் வாயிலாக உதவிப் பொறியாளர் (சிவில்) பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 98 நபர்களுக்கும், உதவிப் பொறியாளர் (மின்) பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 67 நபர்களுக்கும், என மொத்தம் 165 நபர்களுக்கு இன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக உதவிப் பொறியாளர் (சிவில்) 406 நபர்கள், உதவிப் பொறியாளர் (மின்) 103 நபர்கள், முதுநிலை உதவி கொதிகலன்கள் இயக்குநர் 4 நபர்கள், இளநிலை கட்டடக் கலைஞர் 4 நபர்கள், இள நிலை வரைதொழில் அலுவ லர் 156 நபர்கள், இளநிலை உதவியாளர் 55 நபர்கள், தட்டச்சர் 32 நபர்கள் மற்றும் கருணை அடிப்படையில் உதவி வரைவாளர் 11 நபர்கள், இளநிலை உதவியாளர் 17 நபர்கள், பதிவுறு எழுத்தர் 8 நபர்கள், அலுவலக உதவியாளர் 3 நபர்கள் என மொத்தம் 799 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் ஆகிய பணியிடங்க ளுக்கு தெரிவு செய்யப்பட்ட 169 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், தட்டச்சர், காவலர் ஆகிய பணியிடங்களுக்கு 33 வாரிசுதாரர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News