குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு - 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை
- சம்பவத்தன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் இருந்து 4 பேர் கீழே இறங்கி வந்தனர்.
- தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டு கவுண்ட நாயக்கன்பாளையம் பகுதியில் 17.50 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சம்பவத்தன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் இருந்து 4 பேர் கீழே இறங்கி வந்தனர். மதுபோதையில் இருந்த அவர்கள் பொதுமக்களை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். இதையடுத்து பொதுமக்கள் 4 பேரையும் மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் 2 பேர் சிக்கினர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அந்த பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது 19), சஞ்சய் (22) என்பது தெரியவந்தது. அவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி மது அருந்தியதுடன், தண்ணீர் தொட்டியில் இறங்கி குளித்ததாகவும், மலம் கழித்துள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து 2 பேரையும் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது சமூக விரோதிகள் சிலர் ஏறி மது அருந்தி தண்ணீரில் குளித்து அசுத்தப்படுத்தி வருகின்றனர். எனவே அங்கு யாரும் செல்லாமல் இருக்க காவலாளி நியமிக்க வேண்டும் என்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கவுண்ட நாயக்கன்பாளையம் பகுதியில் இன்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார்-மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வேங்கைவயல் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருப்பூரில் நடந்துள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.