திராவிடத்திற்கு எதிரான மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்றது வெட்கக்கேடானது - அமைச்சர் ரகுபதி
- இந்து சமய அறநிலையத்துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களே இருந்திருக்காது.
- தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் போலி வேடம் எடுபடாது.
புதுக்கோட்டையில் கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* திராவிடத்திற்கு எதிரான மாநாட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடானது.
* இந்து சமய அறநிலையத்துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களே இருந்திருக்காது.
* இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சிறுபான்மையினருக்குதான் பாதுகாப்பு தேவை.
* முருகனை தமிழ்நாட்டை விட்டு கடத்திச்செல்ல முடியாது அவர் நம்மோடுதான் இருப்பார்.
* யார் தமிழ்நாட்டை ஆண்டால் பாதுகாப்பு என தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு தெரியும்.
* தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் போலி வேடம் எடுபடாது.
* அ.தி.மு.க. என்று பெயர் வைத்துக்கொள்ளவே தகுதியற்றவர்களாக ஆகி விட்டார்கள்.
* திராவிடத்தை வீழ்த்துவோம் என்று சொல்லி தான் இந்த முருகன் மாநாட்டை நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் கட்சியின் பெயரிலேயே திராவிடம் இருப்பதை எடப்பாடி பழனிசாமி மறந்து விட்டார். மற்றவர்களும் இன்றைக்கு மறந்துவிட்டு பா.ஜ.க.வின் கொத்தடிமைகள் நாங்கள் என்பதை நிருபித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு கிடைத்து இருக்கும் அருமையான அடிமைகள் அவர்கள்.
* இங்கு எந்த ஒரு மத கலாச்சாரத்திற்கு நாங்கள் இங்கு இடம் கொடுக்க மாட்டோம். எல்லா மாணவர்களும் ஒன்றுதான். அவர்கள் அண்ணன் தம்பிகளாக தான் தமிழ்நாட்டின் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருக்கிறார்கள். எல்லா மாநிலத்திலும் கலாட்டாவை உருவாக்கி, அங்கே பயங்கரவாதங்களை உருவாக்கி, சண்டை சச்சரவுகளை உருவாக்கி நுழைந்தார்கள். இங்கே அப்படி நுழைய திராவிட மாடல் அரசு பா.ஜ.க.வை எந்த காலத்திலும் அனுமதிக்காது. அடித்து விரட்டப்படுவார்கள்.
* இங்கே எப்போதும் single engine தான். ஒரே இயக்குபவர் தான் எங்கள் தலைவர் தளபதி தான். எங்கள் தோழமை கட்சிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
* சுற்றுச்சூழல் அனுமதி பெற்று விரைவில் சட்டப்படி மணல் குவாரிகள் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.