சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு
- கழிவறை, சமையல் கூடம், ஆய்வுக்கூடம் டாக்டர்கள் அறை, செவிலியர்கள் அறை மற்றும் பிற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- தங்குதடையின்றி பாதுகாப்பான சுகாதாரமான சேவைகளை பொது மக்களுக்கு வழங்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வருகை தந்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று கொல்லிமலையில் இருந்து காரவள்ளி வரை சுமார் 25 கிலோ மீட்டர் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் நடைபயணம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் சேர்ந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சிகிச்சை பெற்று வரும் பயனாளிகளிடம் மருத்துவமனையின் சிகிச்சை முறைகள் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாளர்கள் ஆகியோர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் கழிவறை, சமையல் கூடம், ஆய்வுக்கூடம் டாக்டர்கள் அறை, செவிலியர்கள் அறை மற்றும் பிற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் தங்குதடையின்றி பாதுகாப்பான சுகாதாரமான சேவைகளை பொது மக்களுக்கு வழங்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராஜ்மோகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
இதை தொடர்ந்து நாமக்கல் மாநகராட்சியில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் புதிய சித்த மருத்துவமனையை திறந்து வைத்தார். ரூ.2.28 கோடி மதிப்பில் புதுச்சத்திரம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு வட்டாரங்களில் 3 புதிய பொது சுகாதார வளாகம், 2 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தையும் திறந்து வைத்து பேசினார்.