தமிழ்நாடு செய்திகள்

கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை சென்னையில் கடல் மேல் பாலம்- சட்டசபையில் அமைச்சர் தகவல்

Published On 2025-01-10 10:47 IST   |   Update On 2025-01-10 10:47:00 IST
  • மும்பையில் கடல் மேல் அடல் சேது பாலம் மத்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
  • முதலமைச்சருடன் கலந்து பேசி இதில் நல்ல முடிவு எடுக்கப்படும்.

சென்னை:

தமிழக சட்டசபை கடந்த 6-ந்தேதி கூடியது. அன்று சபையில் கவர்னர் உரை வாசிக்கப்பட்டது.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடந்தது. இன்று 3-வது நாளாக விவாதம் தொடர்ந்தது.

சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, மும்பையில் உள்ள அடல் சேது பாலம் போல தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, இலங்கையில் நிலவிய உள்நாட்டு போர் காரணமாக அந்த திட்டம் இன்றுவரை கனவுத் திட்டமாகவே இருக்கிறது எனவும், கடந்த 2015-ம் ஆண்டு இந்தியா வந்த அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை சுரங்கப்பாலம் அமைக்க இந்தியா சார்பில் முன்மொழியப்பட்ட தாகவும், ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்தார். கடந்த ஆண்டு அதே ரணில் விக்ரமசிங்கே இந்தியா வந்த போதும் சாலை போக்குவரத்து பாலம் அமைக்க மத்திய அரசின் மூலம் முன்மொழியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, ராமாயணத்தில் ராமர் இலங்கை பாலம் கட்டியதாக இருப்பதாகவும், மும்பையில் கடல் மேல் அடல் சேது பாலம் மத்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும், சென்னையில் பட்டினப்பாக்கத்தில் இருந்து மகாபலிபுரம் வரையில் கடல் மேல் பாலம் அமைக்க அரசு முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ. வேலு, முதற்கட்டமாக கலங்கரை விளக்கத்தில் இருந்து நீலாங்கரை வரையில் கடல் மேல் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாகவும், அதனை மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி அல்லது தனியார் பங்களிப்புடன் செயல்படுத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் எ.வ. வேலு பதில் அளித்தார்.

அப்போது பிச்சாண்டி கூறுகையில் பட்டினப்பாக்கம் முதல் மகாபலிபுரம் வரை கடல் மேல் பாலம் அமைத்தால் தான் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு அமைச்சர் எ.வ. வேலு பதில் அளிக்கையில், பிச்சாண்டி நல்ல ஆலோசனை அளித்துள்ளார். மும்பையில் கட்டப்பட்டுள்ள பாலத்தை நான் பார்த்திருக்கிறேன். அதே போல் சென்னை பகுதிகளில் உள்ள கடலில் பாலம் கட்ட முதற்கட்டமாக கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை 15 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் மேல் பாலம் கட்ட திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சருடன் கலந்து பேசி இதில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News