சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்.
தாராபுரத்தில் வியாபாரிகள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
- வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடை அமைத்து விளை பொருட்களான தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் உள்பட பல்வேறு காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனால் உழவர் சந்தைக்கு முன்பாக உள்ள சாலைகளிலும், பொள்ளாச்சி ரோட்டிலும் விவசாயிகள் அல்லாத வெளி ஆட்கள் சாலை யோரங்களில் காய்கறி கடைகளை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் உழவர் சந்தையில் வியாபாரம் பாதித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். நேற்று காய்கறிகளை தரையில் கொட்டி புகார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இன்று அதிகாலை தாராபுரம் நகராட்சி, நெடுஞ்சாலை துறை மற்றும் போலீசார் தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டனர். இருப்பினும் நகராட்சி ஊழியர்கள் உழவர்சந்தை அருகே உள்ள சாலையில் அமைக்கப்பட்டிருந்த சாலையோர காய்கறி கடைகளை அப்புறப்படுத்தினர்.