தமிழ்நாடு செய்திகள்

பக்தர்கள் யாரும் வராததால் மேல்பாதி அம்மன் கோவில் இன்று மூடப்பட்டது

Published On 2025-04-18 08:26 IST   |   Update On 2025-04-18 08:26:00 IST
  • கோவிலில் பாதுகாப்புக்காக 800 போலீசார் குவிக்கப்பட்டனர்.
  • கோவிலில் ஒரு தரப்பினர் தரிசனம் செய்ய மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 7.4.2023 அன்று நடந்த தீமிதி திருவிழாவில் ஒரு தரப்பினர் வழிபட மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 7.6.2023 அன்று கோவில் தற்காலிகமாக பூட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னர் சென்னை ஐகோர்ட் உத்தரவின்பேரில் 9 மாதங்களுக்குப்பிறகு கோவில் கதவு திறக்கப்பட்டு பக்தர்கள் யாரும் இன்றி ஒருகால பூஜை அர்ச்சகர் அய்யப்பன் மூலம் செய்யப்பட்டது. இந்த நடைமுறையே தொடர்ந்து 11 மாதங்களாக பின்பற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் கோவிலுக்குள் அனைத்து தரப்பு மக்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்றும், சாமி தரிசனம் செய்ய செல்பவர்களை தடுத்தால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி, அனைத்து தரப்பு மக்களின் வழிபாட்டுக்காக நேற்று அதிகாலை 5.35 மணியளவில் கோவில் திறக்கப்பட்டது. முன்னதாக கோவிலில் பாதுகாப்புக்காக 800 போலீசார் குவிக்கப்பட்டனர்.

மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டது. அதன்படி காலை 6.20 மணியளவில் பக்தர்கள், கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்குள் செல்போன்கள், கேமராக்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதில் ஒரு தரப்பினரை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

இதற்கிடையே கோவிலில் ஒரு தரப்பினர் தரிசனம் செய்ய மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். உடனே அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாங்கள் கட்டிய கோவிலுக்குள் அவர்களை போலீசார் அழைத்துச்சென்று எப்படி சாமி கும்பிட வைக்கலாம், எல்லோரும் சமம் என்கிறார்களே அப்படியானால் அவர்களுக்கு மட்டும் சலுகை வழங்குவது ஏன்? அவர்களுக்கு வழங்குகின்ற கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் எங்களுக்கும் வழங்குங்கள் என்றுகூறி போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரையும் போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து, மற்றொரு தரப்பினர் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்கு வருவதாக கூறி இருந்தனர். ஆனால் பக்தர்கள் யாரும் வராததால் கோவில் நடை மூடப்பட்டது.

நேற்று பட்டியலின மக்கள் சென்று அம்மனை வழிபட்ட நிலையில், இன்று மற்றொரு சமூகத்தினர் கோவிலுக்கு வரவில்லை. 

Tags:    

Similar News