திருமணத்திற்கு முன்பு மருத்துவ பரிசோதனை... பொதுநல மனுவுக்கு நீதிபதிகள் சொன்ன வார்த்தை
- திருமணத்திற்கு முன்பு ஜோடிகளுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
- பாராளுமன்றத்திற்கே அதிகாரம் உள்ளது.
மதுரை:
சமீபகாலமாக திருமணத்திற்கு பின்பு நடைபெறும் மணமகன் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பெற்றோர் வற்புறுத்தலின்பேரில் திருமணம் செய்யும் பெண்கள், கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிடுகின்றனர்.
தற்போது இச்சம்பவங்கள் அதிகரித்து வருவதால், திருமணம் என்றால் பய உணர்வு தான் ஏற்படுவதாக மணமகன்கள் கூறிவருகின்றனர். இதனால் பெண்ணை பார்த்ததும் அவர்களின் முழு விவரங்கள் குறித்து அறிய துப்பறியும் நிறுவனங்களை நாடுவதாகவும் கூறுகின்றனர்.
இந்த நிலையில், திருமணத்திற்கு முன்பு ஜோடிகளுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், "இது போன்ற சட்டங்கள் கொண்டுவருவதற்கு பாராளுமன்றத்திற்கே அதிகாரம் உள்ளது. நீதிமன்றம் இவ்வாறெல்லாம் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது" என்று கூறி பொதுநல மனுவை தள்ளுபடி செய்தனர்.