வெளிநாட்டினரும் வந்து பார்க்கும் சுற்றுலாத் தலமாக செஞ்சி மலரட்டும் - கமல்ஹாசன்
- விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக செஞ்சி கோட்டை திகழ்கிறது.
- UNESCO-வின் உலக புராதன சின்னங்களில் செஞ்சிக் கோட்டை இடம் பெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக செஞ்சி கோட்டை திகழ்கிறது. சோழர் காலத்தில், 'சிங்கபுரி' என்றழைக்கப்பட்டது செஞ்சி. இதுவே திரிந்து செஞ்சி என்று ஆனது. சோழர்கள் பலவீனம் அடைந்தபின் ஆனந்தகோன் என்ற குறுநில மன்னர் கோனார் வம்ச ஆட்சியை செஞ்சியில் 13ம் நூற்றாண்டில் நிறுவினார். அதைத் தொடர்ந்து 13ம் நூற்றாண்டிலேயே கோன் சமூக ராஜவம்சத்தால் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. ஆனந்த கோன் எனும் அரசரால் கட்டப்பட்டு, பின்னர் கிருஷ்ண கோன் எனும் அரசரால் விரிவுபடுத்தப்பட்டது.
இந்தக் கோட்டை மூன்று மலைகளை அரணாகக் கொண்டு, சுமார் 13 கிலோ மீட்டர் சுற்றளவைக் கொண்டு, மிகப்பெரிய அரணாக விளங்கியது. செஞ்சி கோட்டை மட்டும் 11 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டு அமைந்திருக்கிறது.
இந்த நிலையில் உலக புராதன சின்னமாக செஞ்சி கோட்டை அறிவிக்கப்பட்டுள்ளது. UNESCO-வின் உலக புராதன சின்னங்களில் செஞ்சிக் கோட்டை இடம் பெற்றுள்ளது.
இதைக்குறித்து தமிழ்நாடு முதல்வர் மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசிருந்தார் அவரைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் கமல்ஹாசன் இதுக்குறித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "நம் பெருமைக்குரிய செஞ்சிக் கோட்டை 1921ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஒரு நூற்றாண்டு கடந்த பிறகு இப்போது உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருப்பது மகிழ்வு தரும் செய்தி. இந்தியாவின் பிற பகுதியினரும் வெளிநாட்டினரும் வந்து பார்க்கும் சுற்றுலாத் தலமாக செஞ்சி மலரட்டும்." என கூறியுள்ளார்.