நாளை காணும் பொங்கல் விழா- வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு
- பார்வையாளர்களுக்கான பார்வை நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
- பார்வையாளர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
வண்டலூர்:
காணும் பொங்கல் விழா நாளை (17-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பூங்கா, கடற்கரை மற்றும் சுற்றுலாதலங்களுக்கு குடும்பத்துடன் சென்று தயார் செய்து கொண்டு வந்த உணவு பொருட்களை சாப்பிட்டு உற்சாகமாக பொழுதை கழிப்பது வழக்கம்.
இன்று மாட்டுப்பொங்கல் மற்றும் நாளை காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் பூங்காவில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்று காலை முதல் ஏராளமானோர் வண்டலூர் பூங்காவில் குவிந்தனர்.
பார்வையாளர்களுக்கான பார்வை நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் என தனித்தனியாக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. வாகன நிறுத்துமிடங்களில் இருந்து பூங்காவிற்கு செல்ல 10 கூடுதல் பஸ்கள், பார்வையாளர்களின் வசதிக்காக மின்னணு நுழைவுச்சீட்டு வழங்கும் முறை, பார்வையாளர்கள் கியாஸ்க், வாட்ஸ்அப் இணையதளம் மற்றும் வண்டலூர் பூங்கா மொபைல் செயலி மூலம் நுழைவுச் சீட்டு பெற இலவச வைபை வசதி வழங்கப்படுகிறது. மேலும், பணமாகவும் டிக்கெட் வாங்க ஒரு கவுன்டர் மட்டும் செயல்படுகிறது.
பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், கரும்பு, பீடி, சிகரெட், மது மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை பூங்காவிற்குள் கொண்டு வர அனுமதி இல்லை. நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுப்பினர். பாதுகாப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 65 வனத்துறை பணியாளர்கள் மற்றும் 60 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாற்றுத்திறனாளி பார்வையாளர்களின் வசதிக்காக சக்கர நாற்காலி வசதி மற்றும் அவர்களுக்கு ஏற்ற நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு வழிகாட்டும் வகையில் கூடுதல் தகவல் பலகைகள் மற்றும் திசை குறிப்பு பலகைகள் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. 4 புதிய கழிப்பறை வளாகங்கள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. பூங்கா முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது.
பூங்காவில் புதிதாக பிறந்த நீர்யானை, இந்திய காட்டு மாடு, சதுப்புநில மான், வெளிமான், கடமான், அனுமன் குரங்கு, நீலகிரி கருங்குரங்கு, நெருப்புக் கோழி மற்றும் அனகோண்டா பாம்புகள் ஆகியவை பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கிறது. தினமும் மாலை 4 மணிக்கு யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். மேலும், பார்வையாளர்களுக்காக 7 டி திரையரங்கு இயக்கப்படுகிறது. மேலும் பார்வையாளர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.