காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள் விலை கடுமையாக உயர்வு
- தை, மாசி, சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் திருமண சீசன் என்பதால் அப்போது பட்டுச் சேலைகள் விற்பனை களை கட்டும்.
- காஞ்சிபுரத்தில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருமண வீடு என்றாலே அங்கு காஞ்சிபுரம் பட்டுக்கு தான் முதல் மரியாதை. மணமகள், மணமகன் குடும்பத்தினர் அனைவருமே பட்டு ஆடைகளை உடுத்தி புதுப்பொலிவுடன் காட்சி அளிப்பார்கள்.
அதிலும் மணமகள் அணியும் பட்டுச்சேலையானது அசல் தங்கம், வெள்ளி ஜரிகைகளுடன் புத்தம் புதுப்பொலிவுடன் ஜொலிக்கும். மணமகள் அணியும் முகூர்த்த பட்டுச்சேலையின் அழகை திருமணத்துக்கு வரும் பெண்கள் அனைவருமே பார்த்து ரசிப்பார்கள். வியக்கவும் செய்வார்கள்.
இந்த பாரம்பரிய புடவைக்கு அழகு சேர்ப்பது தங்கம், வெள்ளி ஜரிகைகள் தான். ஆனால் தங்கமும், வெள்ளியும் கடந்த 2 மாதங்களாகவே வரலாறு காணாத விலை உயர்வை கண்டுள்ள நிலையில், அதன் தாக்கம் காஞ்சிபுரம் பட்டுச்சேலையிலும் எதிரொலித்து வருகிறது.
இதன் விளைவு காஞ்சிபுரம் பட்டுச்சேலையின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. அதாவது அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள் இப்போது ஏழைகளுக்கு காட்சி பொருளாக மாறி விட்டது.
காஞ்சிபுரம் பட்டுச் சேலையில் பயன்படுத்தப்படும் ஜரிகையின் அளவை பொறுத்து அதன் விலை அதிகரித்து உள்ளது. காஞ்சிபுரம் பட்டுச் சேலையில் தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சேலை 0.5 சதவீதம் தங்கம், 40 சதவீதம் வெள்ளி, 35.5 சதவீதம் தாமிரம் மற்றும் 24 சதவீதம் பட்டு நூல்கள் இருக்கும்.
தற்போது தங்கம் விலை சவரன் ரூ.90 ஆயிரத்தையும், வெள்ளி கிலோ ரூ.1.65 லட்சத்தையும் தாண்டி விற்பனையாகிறது. பட்டுச் சேலை ஜரிகையில் தங்கம் மற்றும் வெள்ளியின் அளவை குறைக்க முடியாததால் அதன் விலை அதிகரித்துள்ளது.
இதற்கு முன்பு ஜரிகை கிலோ ரூ.85 ஆயிரமாக இருந்தது. அது இப்போது ரூ.1.35 லட்சமாக அதிகரித்து விட்டது. ஒரே வருடத்தில் கிலோவுக்கு ரூ.50 ஆயிரம் உயர்ந்துள்ளது.
குறைந்த அளவிலான ஜரிகைகள் கொண்ட காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் இதற்கு முன்பு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்கப்பட்டது. ஆனால் இந்த சேலைகளின் விலை தற்போது ரூ.20 ஆயிரமாக அதிகரித்து விட்டது. அதிக ஜரிகைகள் கொண்ட பட்டுப்புடவை விலை ஏற்கனவே ரூ.2 லட்சத்துக்கும் மேல் விற்கப்பட்டது. இந்த சேலைகள் விலை தற்போது பல மடங்கு அதிகரித்து உள்ளன.
திருமணங்கள் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளின் போது குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவருமே பட்டுச்சேலை அணிவது நமது பாரம்பரியங்களில் ஒன்றாகும். ஆனால் இப்போது திருமண நிகழ்ச்சிகளை வைத்திருக்கும் ஏழை குடும்பத்தினரால் மிக குறைந்த ஜரிகைகள் கொண்ட பட்டுச்சேலைகளையே வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக ஜரிகைகளை கொண்ட பட்டுச் சேலைகள் நடுத்தர வர்க்கத்தினருக்கு விலை அதிகமாக தெரிகிறது. இதனால் அவர்களும் திருமண நிகழ்ச்சிகளுக்கு பட்டுச் சேலைகளை வாங்க பொருளாதார ரீதியாக கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். காஞ்சிபுரத்தில் பட்டுச் சேலைகளை விற்பனை செய்யும் கடைகள் 1000-க்கும் மேல் உள்ளன. மேலும் அங்குள்ள பல வீடுகளிலும் பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகின்றன.
தை, மாசி, சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் திருமண சீசன் என்பதால் அப்போது பட்டுச் சேலைகள் விற்பனை களை கட்டும். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பட்டுச் சேலைகள் வாங்க காஞ்சிபுரத்துக்கு வருகிறார்கள்.
மேலும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் பட்டுச்சேலைகள் வாங்க காஞ்சிபுரத்துக்கு வருவது உண்டு. அவர்கள் பல லட்சம் செலவு செய்து பட்டுச் சேலைகளை வாங்கி செல்வார்கள். ஆனால் இப்போது பட்டுச் சேலைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சேலை வாங்க வருபவர்கள் ரூ.2 லட்சத்துக்கும் மேற்பட்ட விலை கொண்ட பட்டுச் சேலைகளை வாங்குவதை தவிர்க்கிறார்கள். மேலும் குறைந்த விலை கொண்ட சேலைகளையே தேர்வு செய்து வாங்குகிறார்கள். மேலும் குறைவான எண்ணிக்கையிலேயே சேலைகளை வாங்கும் நிலைக்கும் தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் பட்டுச்சேலை விற்பனையும் குறைந்து வருகிறது.
பட்டுச்சேலை விற்பனை குறைந்துள்ளதால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. நெசவாளர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தங்கத்தின் விலை உயர்வு பட்டுத் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். இதனால் இப்போதே பல தொழிலாளர்கள் வேறு தொழில்களை நோக்கி செல்லத் தொடங்கி விட்டனர். இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்து செல்ல முடியாது என்பதால் பட்டுத்தொழில் மிகவும் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கி உள்ளது.
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சிலர் மட்டுமே ஆதாயம் அடையலாம். ஆனால் இந்த விலை உயர்வானது பலரது வாழ்வாதாரத்தையே அழித்து விடும் என்பதற்கு பட்டுத் தொழில் ஒரு சாட்சியாக கண்முன் வந்து நிற்கிறது.
இனி வரும் காலங்களில் தங்கம், வெள்ளி விலையானது கட்டுக்குள் இருந்தால் மட்டுமே பட்டுத்தொழிலும் தொடர்ந்து நடைபெறும். தங்கம், வெள்ளி விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்தால் அது காஞ்சிபுரம் பட்டுத் தொழிலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.