தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. போராட்டத்திற்கு ஒரே நாளில் அனுமதி? - நடவடிக்கை கோரி முறையீடு : வழக்கு தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தல்

Published On 2025-01-07 14:48 IST   |   Update On 2025-01-07 14:48:00 IST
  • ஒரே நாளில் அனுமதி வழங்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஒருவேளை போலீஸ் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியிருந்தால், தி.மு.க.வினர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி பி.வேல்முருகன் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்.

அப்போது பா.ம.க.வைச் சேர்ந்த வக்கீல் கே. பாலு ஆஜராகி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த பாமக மகளிர் அணி சென்னை போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தது. ஆனால் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பம் செய்யவில்லை என்று காரணம் கூறி கடைசி நேரத்தில் போலீசார் அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.

வெளியூரிலிருந்து வந்த பெண்கள் காலையில் போராட்டம் நடத்த முற்பட்டபோது அவர்களை கைது செய்து மாலை 7 மணி வரை திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து, பின்னர் விடுவித்தனர். ஆனால், நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக மாநில கவர்னரை கண்டித்து ஆளும்கட்சியான தி.மு.க. இன்று சைதாப்பேட்டையில் போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான விண்ணப்பத்தை ஒரே நாளில் போலீசார் பரிசீலித்து போராட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர் . இது குறித்து தகுந்த உத்தரவை இந்த ஐகோர்ட்டு பிறப்பிக்க வேண்டும். எனவே ஒரே நாளில் அனுமதி வழங்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒருவேளை போலீஸ் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியிருந்தால், தி.மு.க.வினர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஐகோர்ட்டு தான் பொதுமக்களின் பாதுகாவலர் என்பதால் இது சம்பந்தமாக தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று முறையிட்டார்.

அதற்கு நீதிபதி, "இந்த ஐகோர்ட்டு தான் பொதுமக்களின் பாதுகாவலர் அந்த பொறுப்பை நான் உதறித் தள்ள விரும்பவில்லை. இந்த விவகாரம் குறித்து வழக்கு தாக்கல் செய்திருந்தால் அந்த வழக்கை நாளை காலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன். அந்த வழக்கை விசாரித்து தகுந்த உத்தரவையும் பிறப்பிக்கின்றேன் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News