தமிழ்நாடு செய்திகள்

விவசாயி வங்கி கணக்கில் ரூ.1.05 கோடி டெபாசிட்: வருமான வரித்துறை விசாரணை

Published On 2025-07-31 10:01 IST   |   Update On 2025-07-31 10:01:00 IST
  • தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
  • நோட்டீஸ் வந்தபிறகுதான் மணிகண்டன் தனது வங்கி கணக்கை சோதனை செய்த போது பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது உறுதியானது.

உத்தமபாளையம்:

தேனி அருகே விவசாய கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.1 கோடி டெபாசிட் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா காமையகவுண்டன்பட்டி கருப்பணன் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் ஏலத் தோட்டம் கேரள மாநிலம் உடும்பன்சோலையில் உள்ளது.

இந்நிலையில் தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து இவருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. அதில் உங்களுடைய பான் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 41 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டம் விவரிக்கப்படாத பணம் பிரிவு 69 அ-வின்படி இது குறித்து நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகும். எனவே தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நோட்டீஸ் வந்தபிறகுதான் மணிகண்டன் தனது வங்கி கணக்கை சோதனை செய்த போது பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது உறுதியானது. இதனையடுத்து தேனி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்ற மணிகண்டன் இந்த பண பரிவர்த்தனைக்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறுதலாக பலரது வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு பின்னர் அந்த பணம் விடுவிக்கப்பட்டது. அதே போன்று தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News