தமிழ்நாடு செய்திகள்

இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர்- நயினார் நாகேந்திரன்

Published On 2025-05-19 11:05 IST   |   Update On 2025-05-19 11:38:00 IST
  • நெருப்பு இல்லாமல் புகையாது. அதுபோல் தான் டாஸ்மாக்கில் புகார்கள் இருப்பதால் தான் சோதனை நடைபெறுகிறது.
  • ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர்.

மதுரை:

மதுரை தனியார் மருத்து வக்கல்லூரி விடுதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்தபின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டின் பாதுகாப்புக்காக போராடிய ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாகவும் பிரதமரை பாராட்டும் விதமாகவும் மூவர்ணக்கொடி யாத்திரை தமிழக முழுவதும் நடை பெற்று வருகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து டாஸ்மாக் அலுவலர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. அது ஒரு தனிப்பட்ட அமைப்பு.

அமலாக்கத்துறை சோதனைக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. அது ஒரு சுதந்திரமாக செயல்படும் அமைப்பு. நெருப்பு இல்லாமல் புகையாது. அதுபோல் தான் டாஸ்மாக்கில் புகார்கள் இருப்பதால் தான் சோதனை நடைபெறுகிறது. தமிழக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை குறித்து எனக்கு முழுமையாக தெரியாது.

த.வெ.க. தலைவர் விஜய் பா.ஜ.க. கூட்டணியில் பங்கு பெற விருப்பமில்லை எனக்கூறியது அவருடைய சொந்த விருப்பம். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் அனைவரும் ஓரணியாக இணைந்தால் எளிதாக இருக்கும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. அப்போது பா.ஜ.க. கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

2026-ல் தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் கூறி உள்ளார். அவர் கருத்து சொல்வதற்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் அதை தீர்மானிக்கக்கூடிய சக்தி மக்களிடம் தான் உள்ளது.

நம் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களை பற்றி யாரும் குறை சொல்லி பேசக்கூடாது. ஓ.பன்னீர் செல்வம் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறார். அதில் எதுவும் சந்தேகமில்லை. அவர் கூட்டணியில் இருப்பதால் அமித்ஷா சென்னைக்கு வந்தபோது சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர். அதில் எதுவும் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News