தமிழ்நாடு செய்திகள்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெயரில் ரூ.20 லட்சம் மோசடி - விசாரணை நடத்த மதுரை போலீஸ் கமிஷனர் உத்தரவு

Published On 2025-05-02 14:46 IST   |   Update On 2025-05-02 14:47:00 IST
  • ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நடராஜன், விஜயலட்சுமி இருவரும் தமிழ்நாட்டில் கலெக்டராக பணிபுரிந்தவர்கள்.
  • எனது பணம் முழுவதும் அவர்கள் மோசடி செய்து விட்டனர்.

மதுரை:

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் திருமலை பகவான் என்ற பெயரில் பஸ் சர்வீஸ் நடத்தி வருகிறேன். ஒட்டன் சத்திரத்தில் இருந்து வேடசந்தூருக்கு பேருந்து வழித்தட அனுமதி வாங்கி தருவதாக கூறி மதுரையை சேர்ந்த மணி என்பவர் என்னை அணுகினார். அவர் மும்பையைச் சேர்ந்த குருபாய் என்பவரை மகாராஷ்டிரா முதல் மந்திரியின் உறவினர் என்றும், அதே போல் தனியார் கண் மருத்துவமனையின் உரிமையாளர் என்று டாக்டர் ராஜ்குமார் என்பவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நடராஜன், விஜயலட்சுமி இருவரும் தமிழ்நாட்டில் கலெக்டராக பணிபுரிந்தவர்கள். தற்போது அரசு உயர் பதவியில் இருக்கிறார்கள். அவர்களிடம் சொன்னால் உங்களுக்கு பேருந்து வழித்தட அனுமதி கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி என்னிடம் ரூ.20 லட்சம் வரை வங்கிப் பரிவர்த்தனை மூலமாக பல்வேறு தவணை களில் பணம் பெற்றனர். பல மாதங்கள் ஆகியும் எனக்கு பேருந்து வழித்தட அனுமதி கிடைக்கவில்லை. திரும்பவும் நான் கேட்டதற்கு சரிவர அவர்கள் பதிலளிக்கவில்லை. வீணாக அலைக்கழிப்பு செய்தனர்.

இதன் காரணமாக எனது குடும்பத்தினரால் நான் தனிமையாக ஒதுக்கப்பட்டேன். தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளேன். ஆரப்பாளையத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று நான் செலுத்திய பணத்தையாவது திரும்ப கொடுங்கள் என்று கேட்டேன். அப்போது எல்லா பணத்தையும் கலெக்டர் நடராஜன் மற்றும் விஜயலட்சுமி ஆகியோரிடம் கொடுத்து விட்டோம். அதை எல்லாம் திரும்ப கேட்டு பெற முடியாது. ஆகையால் ஊர் போய் சேருங்கள். அதையும் மீறி அடிக்கடி இங்கே வந்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர்.

மேலும் அவர்கள் என்னை மிரட்டும்போது பட்டுமணி என்ற ஒருவர் தன்னை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் என்றும் அவருடன் இரண்டு போலீஸ்காரர்களும் இருந்தனர். அவர்களும் சேர்ந்து என்னை இனிமேல் வந்தால் கஞ்சா கேசில் உள்ளே தள்ளி விடுவோம். சிறைக்கு சென்றால் நீ என்றுமே வெளியே வர முடியாது என்றும் மிரட்டினர். இவ்வாறு நான் இந்த கும்பலிடம் ஏமாந்தது அறிந்த எனது மனைவியும் என்னுடன் பேசுவதற்கு மறுத்து வருகிறார்.

இதனால் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆகவே எனக்கு உயிருக்கு பயமாக உள்ளது. எனது பணம் முழுவதும் அவர்கள் மோசடி செய்து விட்டனர். எனவே எனது பணத்தை பெற்று தருமாறும், போலியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெயரை சொல்லி மோசடி செய்த இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பரிசீலித்த கமிஷனர் லோகநாதன் உரிய விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News