கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை- நிர்மலா சீதாராமன்
- மாநில அரசை கண்காணிக்க நான் இங்கு வரவில்லை என்றார் நிர்மலா சீதாராமன்.
- சமூக வலைதளத்தில் பிரதமர், மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரில் பெரும்பான்மையானோர் ஏழைக் குடும்பங்கள். வீட்டுக்கு வாழ்வாதாரமாக இருந்தவர்களே இறந்து போயிருக்கிறார்கள். கேட்கவே துக்கமாக இருந்தது.
என்ன ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை.
நேரடியாக வரும் சூழல் பிரதமருக்கு இல்லாத நிலையில் என்னை நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்குமாறு கூறினார்.
சமூக வலைதளத்தில் பிரதமர், மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
பாதிக்கப்பட்டோரை சென்று சந்திக்கும் நிகழ்வு தானே தவரி, இதில் வேறு எதுவுமே இல்லை.
பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம், சிகிச்சை பெறுவோருக்கு ரூ.50 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவி பாதிக்கப்பட்டோரை சென்றடைவதை நான் கண்காணிப்பேன். பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குக்கே பிரதமரின் நிவாரண நிதியை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல் பலி சம்பவம் இனி நமது நாட்டில் எங்கும் நிகழக் கூடாது. தவெக எதிர்பார்த்ததை விட மித மிஞ்சிய அளவுக்கு கூட்டம் கூடியதாக மக்கள் கூறினார்கள்.
பாதிக்கப்பட்டோர் கூறியதை பிரதமர், மத்திய உள்துறை அமைச்சரிடம் சென்று கூறுவேன். மாநில அரசு சொல்கிறது,. என்ன செய்கிறது என்பதை கண்காணிக்க நான் வரவில்லை, பிரதமர் அறிவுறுத்தலில் வந்துள்ளேன்.
இந்த மாதிரியான சம்பவம் நிகழும்போது பலவிதமான கருத்துகள் வருவதும், கோபம் எழுவதும் இயல்புதான்.
இவ்வாறு அவர் கூறினார்.