காசிமேட்டில் பெரிய வகை மீன்கள் வரத்தால் களை கட்டிய விற்பனை
- தடைகாலம் முடிந்து கடலுக்குள் சென்று இருந்த விசைப்படகு மீனவர்களின் வலையில் பெரியவகை மீன்கள் அதிகம் சிக்கி இருந்தன.
- சிறிய வகை மீன்கள் வரத்தும் அதிகமாக இருந்தது.
திருவொற்றியூர்:
தமிழகத்தில் 61 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைகாலம் கடந்த வாரம் சனிக்கிழமையுடன் முடிந்தது. அன்று இரவே காசிமேட்டில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் கரை திரும்ப குறைந்தது 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை ஆகும்.
இந்தநிலையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் இன்று அதிகாலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பினர். தடைகாலம் முடிந்து கடலுக்குள் சென்று இருந்த விசைப்படகு மீனவர்களின் வலையில் பெரியவகை மீன்கள் அதிகம் சிக்கி இருந்தன.
இதனால் காசிமேட்டில் விற்பனைக்காக பெரிய வகை மீன்களான வஞ்சிரம், வவ்வால், ஷீலா, தேங்காய் பாறை, சங்கரா, தோல் பாறை, திருக்கை, கொடுவா உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது. விசைப் படகுகளில் இருந்து கூடை கூடையாக ஏல முறையில் மீன்களை விற்பனை செய்தனர். இதனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு காசிமேடு மீன்பிடி துறைமுகம் களை கட்டி இருந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் இன்று காசி மேட்டில் மீன்வாங்க கூட்டம் அலைமோதியது. மீன்பிரியர்கள் போட்டி போட்டு தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர்.
அதிக அளவு மீன்கள் விற்பனைக்கு குவிந்ததால் கடந்த வாரத்தை காட்டிலும் மீன்களின் விலை குறைவாகவே காணப்பட்டது. சிறிய வகை மீன்கள் வரத்தும் அதிகமாக இருந்தது. மொத்த வியாபாரிகள், சுற்றுவட்டார பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் சில்லறை விலையில் விற்பனை செய்யும் மீனவர்களும் காசிமேட்டில் அதிக அளவில் குவிந்து தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கிச் சென்றனர். சில்லறை விற்பனை கடைகளும் இன்று அதிகமாகவே காணப்பட்டது.
காசிமேட்டில் மீன்விலை(கிலோவில்)வருமாறு:-
வஞ்சிரம்-ரூ.800 முதல் 900
ஷீலா-ரூ.500
பால் சுறா-ரூ.500
சங்கரா -ரூ.400
பாறை -ரூ.400
இறால்-ரூ.300
நண்டு -ரூ.300
நவரை -ரூ.300
பண்ணா-ரூ.300
காணங்கத்தை -ரூ.300
கடுமா-ரூ.300
நெத்திலி-ரூ.200