தமிழ்நாடு செய்திகள்

திருநாகேசுவரம் கோவில் கும்பாபிஷேக நிதி முறைகேடு வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கும்- ஐகோர்ட் மதுரை கிளை

Published On 2025-04-09 14:05 IST   |   Update On 2025-04-09 14:05:00 IST
  • ரூ.80 லட்சம் வரையிலான கோவில் நிதி, நிபந்தனைகளுக்கு மாறாக கும்பாபிஷேகத்திற்காக எடுக்கப்பட்டு உள்ளது.
  • எதிர்காலத்தில் வேறு எந்த கோவிலிலும் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மதுரை:

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த செல்லப்பா குருக்கள், சங்கர் குருக்கள் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 2021-ம் ஆண்டில் திருநாகேஸ்வரம் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதற்காக எந்தவித ரசீதும் வழங்காமல் நன்கொடை வசூலிக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பியதால் எங்களை இடமாற்றம் செய்து உள்ளனர். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனவே இந்த முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், மேற்கண்ட கோவில் கும்பாபிஷேகத்தின்போது பக்தர்களிடம் எந்த ரசீதுகளும் இல்லாமல், எந்த கணக்குகளும் இல்லாமல் நன்கொடைகள் வசூலிக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் 24.10.2021 அன்று நடத்தப்பட்டது. சாமானிய மக்களும் பக்தர்களும் இந்தப் பிரச்சனையை 2021-ம் ஆண்டிலேயே எழுப்பியுள்ளனர். இந்த முறைகேடு சம்பந்தமாக இந்த நீதிமன்றம் 2022-ம் ஆண்டில் உத்தரவுகள் பிறப்பித்து உள்ளது.

மேலும் 2022-ம் ஆண்டில் அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குற்றம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது தணிக்கை அறிக்கையிலும் உறுதியாகி உள்ளது. நன்கொடையாளர்களை ஏற்பாடு செய்யவும், பணிகளை மேற்கொள்ளவும் அர்ச்சகர்களுக்கு அனுமதிக்கப் பட்டு உள்ளது. கும்பாபிஷேக பணிகளை எந்த உத்தரவும் இல்லாமல் செய்துள்ளனர்.

ரூ.80 லட்சம் வரையிலான கோவில் நிதி, நிபந்தனைகளுக்கு மாறாக கும்பாபிஷேகத்திற்காக எடுக்கப்பட்டு உள்ளது. இதனை அறநிலையத்துறை இத்தனை ஆண்டுகளாக கண்டுகொள்ளவே இல்லை. இந்த பிரச்சனையை மறைக்கும் நோக்கில் அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடுவதன் மூலம் உண்மையைக் கண்டறிய இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது.

எனவே இந்த கோவில் கும்பாபிஷேக நிதி முறைகேடு புகார் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரித்து முறைகேடுக்கான முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சி.பி.சி.ஐ.டி. மத்திய மண்டலத்தின் காவல் கண்காணிப்பாளர் சண்முகபிரியா, இந்த விசாரணையை கண்காணித்து, மாதாந்திர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேக பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட் டுள்ளன என்பதை அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும். எதிர்காலத்தில் வேறு எந்த கோவிலிலும் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த வழக்கு விசாரணையை இந்த கோர்ட்டு முறையாக கண்காணித்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு அடுத்தகட்ட விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

Similar News