அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரம்: இ.பி.எஸ்-க்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை
- உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ள சூரியமூர்த்தி, அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினரே இல்லை.
- உறுப்பினராக இல்லாத சூரிய மூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது.
சென்னை:
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யபட்டார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தது உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து, அ.தி.மு.க. உறுப்பினர் எனக் கூறி, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, உரிமையியல் வழக்கை சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், பொதுச்செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஜூலை மாதம் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயண் வக்கீல் நர்மதா சம்பத் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ள சூரியமூர்த்தி, அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினரே இல்லை. உறுப்பினராக இல்லாத சூரிய மூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது. எனவே, கீழ் கோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, கீழ் கோர்ட்டு உத்தரவுக்கும், அங்கு நடைபெறும் வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்த நீதிபதி மனு குறித்து சூர்ய மூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 3-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.