கோவையில் கொட்டி தீர்த்த கனமழை- 30 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
- சில இடங்களில் கனமழையுடன் சூறாவளி காற்றும் வீசியது.
- வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர்.
கோவை:
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
நேற்று காலை கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பிற்பகலில் வானிலை அப்படியே மாறியது. தொடர்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது.
காந்திபுரம், உக்கடம், ரெயில் நிலையம், பீளமேடு, சரவணம்பட்டி, கணபதி, ராமநாதபுரம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், சூலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. சில இடங்களில் கனமழையுடன் சூறாவளி காற்றும் வீசியது.
அரை மணி நேரத்திற்கும் மேலாக விடாது பெய்த பலத்த மழையால் மாநகரில் உள்ள முக்கிய சாலைகளான அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, ரெயில் நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
கோவை மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட ஹட்கோ காலனி, முருகன் நகர், ஆர்.கே.எம்.சி. காலனி, பட்டாளம்மன் கோவில் வீதி, எல்லைத் தோட்டம் 4-வது வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதேபோல் ஆர்.எஸ்.புரம் 73-வது வார்டு பி.எம்.சாமி காலனி 2-வது வீதியில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர்.
இதேபோல் குட்ஷெட் சாலை உள்பட நகரில் உள்ள முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.
மழை காரணமாக கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதிலும், இறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.
ஐதராபாத், மும்பையில் இருந்து கோவைக்கு வந்த 2 விமானங்கள் தரையிறங்க முடியாமல் 20 நிமிடம் வானிலேயே வட்டமடித்தது. மழை ஓய்ந்த பின்னரே 2 விமானங்களும் தரையிறங்கின. இதேபோல் கோவையில் இருந்து மும்பைக்கு பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இந்த மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையே கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக விமான நிலைய பகுதியில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-
விமான நிலையம்-74, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்-47, சின்னக்கல்லார்-42, கோவை தெற்கு தாலுகா-36, வால்பாறை பி.ஏ.பி.-31, வால்பாறை தாலுகா-29, சோலையார் மற்றும் தொண்டாமுத்தூர் பி டபிள்யூ அலுவலகம்-16 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.