கனமழை எதிரொலி - 13 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
- மிக கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தென் கடலோர மாவட்டங்களை மிரட்டி வரும் நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (திங்கட்கிழமை) தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் (26-ந்தேதி) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறி உள்ளார்.
மிக கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த கல்லூரிகளில் இன்று நடக்க இருந்த பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. மிக கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக அரியலூர், ராமநாதபுரம், திருவாரூர், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக புதுவை, காரைக்கால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.