தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் அடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2024-12-10 11:07 IST   |   Update On 2024-12-10 11:07:00 IST
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகும் பட்சத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது.

சென்னை:

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டி நிலநடுக்கோட்டையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.

இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (புதன்கிழமை) இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும். நாளை தமிழக கடலோர பகுதியை நெருங்கி வரும்.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை), திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே மாவட்டங்களில் நாளை (11-ந்தேதி) மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த நாளில் புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட் டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (புதன்கிழமை) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழைக்கும், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

12-ந்தேதி (வியாழக்கிழமை) திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும்.

13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

14-ந்தேதி (சனிக்கிழமை) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (11-ந்தேதி), நாளை மறுநாள் (12-ந்தேதி) கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே புயல் சின்னம் காரணமாக இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை மீனவர்கள் மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழக கடற்கரையை நோக்கி வரும் புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் பட்சத்தில் நாளை (11-ந்தேதி) டெல்டா மாவட்டங்களில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தரங்கம்பாடி-அதிராம்பட்டினம் இடையே அது கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

அதே சமயத்தில் நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகும் பட்சத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தை கடந்த பிறகு அது அரபிக்கடல் சென்றடையும்.

அதே சமயம் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாகவே நகர்ந்து வந்தால் தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடைப்பட்ட மன்னார் வளைகுடா வழியாக தெற்கு நோக்கி நகர்ந்து, கரையையொட்டிய படி கடலிலே நகர்ந்து குமரிக் கடல் வழியாக அரபிக் கடல் நோக்கி பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News