தமிழ்நாடு செய்திகள்

நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: பாடந்தொரை, அலவயலில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

Published On 2025-08-29 09:31 IST   |   Update On 2025-08-29 09:31:00 IST
  • மழையுடன் கடும் குளிரும், பனிமூட்டமும் காணப்படுகிறது.
  • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

குறிப்பாக கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் பந்தலூர், கூடலூரில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பல சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

பாடந்தொரை-அலவயல் பிரதான சாலை முழுவதும் நீரில் மூழ்கியதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தண்ணீர் வடியும் வரை காத்திருந்து அதன்பின்னரே மக்கள் அவ்வழியாக சென்றனர். கர்க்கார்பாலி செல்லும் சாலையிலும் மழைநீர் தேங்கி நின்றதால், வாகனங்கள் மெதுவாக சென்றன.

கனமழைக்கு பாடந்தொரை மற்றும் அலவயல் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடுகளுக்குள் தேங்கிய தண்ணீரை வாளி மூலமாக வெளியேற்றினர். சிலர் அங்கிருந்து வெளியேறி தங்களது உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

கூடலூர் பகுதியில் பெய்த கனமழைக்கு தேவாலா அருகே வாழவயல் பகுதியில் சுந்தரலிங்கம் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த சுந்தரலிங்கத்தின் மனைவி சந்திரிகா(50) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோல் அந்த பகுதியில் உள்ள முத்துலிங்கம் என்பவரது வீடும் மழைக்கு இடிந்து விழுந்தது.

பந்தலூர் தாலுகாவில் உப்பட்டி பொன்னானி, நெலாக்கோட்டை பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் பந்தலூர் பஜாரில் வெள்ளம் தேங்கி நின்றது. இதனால் கூடலூர், கோழிக்கோடு சென்ற அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்த படியே சென்றன.

ஊட்டியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழையுடன் கடும் குளிரும், பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதை அடுத்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி மாவட்டத்தில் அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடியதாக 283 பகுதிகளை கண்டறிந்துள்ளனர். அந்த பகுதிகளை கண்காணிக்க 43 மண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளது.

மேலும் நீலகிரியில் 3,600 முதல்நிலை பொறுப்பாளர்கள், 200 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் பேரிடர் பாதிப்பு இருந்தால் வருவாய்த்துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து நிவாரண முகாம்களில் தங்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர். 

Tags:    

Similar News