கோவை-நீலகிரியில் கடும் பனிமூட்டம்: குளிரால் பொதுமக்கள் அவதி
- நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தை விட பருவமழை அதிகமாக பெய்துள்ளது.
- ஏற்காட்டில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.
கோவை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 3 தினங்களாக குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அத்துடன் பனிமூட்டமும் அதிகரித்துள்ளது. வழக்கமாக காலை 7 மணிக்கெல்லாம் தெளிவான வானம் காணப்படும். ஆனால் 3 தினங்களாக காலை 10 மணி வரை பனிமூட்டமாகவே இருக்கிறது. 10 மணிக்கு பிறகு தான் தெளிவான வானம் தெரிகிறது. மேலும் மாலை 4 மணிக்கெல்லாம் இருள் சூழ தொடங்கி விடுகிறது.
மாநகர பகுதிகளான ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், பாப்பநாயக்கன்பாளையம், அவினாசி சாலை, பீளமேடு, சிங்காநல்லூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் வாலாங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. வானமும் மேகமூட்டமாகவே உள்ளது
பனிமூட்டத்தால் அவினாசி சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.
அதிகாலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. பகல் நேரத்திலும் குளிர் காணப்படுகிறது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் ஸ்வெட்டர் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு தான் வெளியில் வருகின்றனர்.
வால்பாறை பகுதி முழுவதும் அதிகாலை முதல் கடும் பனிமூட்டத்துடன் குளிரும் வாட்டி வதைத்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் கம்பளி ஆடைகளை அணிந்தபடி சென்றனர். கடும் குளிரால் மக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள் முடங்கினர்.
நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தை விட பருவமழை அதிகமாக பெய்துள்ளது. இதனால் நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்துள்ளது. கடந்த 3 தினங்களாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. பனிமூட்டத்தால் கடும் குளிரும் வாட்டி வதைக்கிறது.
கடும் குளிர், பனிமூட்டம் காணப்படுவதால் அதிகாலையில் தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கம்பளி போர்த்திய ஆடைகள் அணிந்து கொண்டு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வழக்கமாக 8 மணிக்கு வேலைக்கு செல்வர். தற்போது நிலவும் பனிமூட்டத்தால் 2 மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு தான் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேயிலை மற்றும் மலைக்காய்கறிகள் விவசாயமும் பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைப்பதால் மக்கள் வெளியில் வருவதில்லை. வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் காலை, மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டமும் குறைந்து விட்டது.
ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் குளிர் காணப்படுகிறது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் தங்கள் வீடுகளில் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றன. கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டிலும் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இன்றும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் காலை நேரங்களில் ஏற்காடு காபி தோட்டத்திற்கு செல்லும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு மலைப் பாதையிலும் கடும் பனி மூட்டம் நிலவுவதால் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே ஊர்ந்து செல்கின்றன. ஏற்காட்டில் கடும் குளிர் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் இன்றி ஏற்காட்டில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று வரை கடும் பனிமூட்டம் இருந்தது. இன்று காலை முதல் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையுடன் குளிரும் சேர்ந்து வாட்டி வதைக்கிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக மழை குறைந்து காணப்பட்டாலும், கடும் குளிர் நிலவுகிறது. அதிகாலை நேரத்தில் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.