தமிழ்நாடு செய்திகள்

சுகாதாரச் சான்றிதழ்களை இ-சேவை தளத்தில் மட்டுமே பெற முடியும்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு

Published On 2025-06-21 08:01 IST   |   Update On 2025-06-21 08:01:00 IST
  • ஆய்வின்போது சுகாதார நெறிமுறைகள் கடைபிடிக்காதது தெரியவந்தால் சான்றிதழை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது.
  • நேரடியாக ஆவணங்கள் மற்றும் நகல்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

சென்னை:

பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொது மக்கள் அதிகம் கூடும் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகம், பெண்கள் விடுதிகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற வணிக கட்டிடங்களில் சுகாதாரச் சான்றிதழ் பெறுவது அவசியம். சுகாதார சீர்கேடுகளை தவிர்க்கவும், வளாகங்களில் தூய்மை மற்றும் சுகாதார தரத்தை உறுதிபடுத்தவும் சுகாதாரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரச் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கும் முறை மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.

இதில் சில சிக்கல் எழுந்தது. இதையடுத்து, சுகாதாரச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டமிட்டது. அதன்படி, எளிமை ஆளுமை திட்டத்தின் வாயிலாக இ-சேவை தளம் மூலம் சுகாதாரச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

https://tnesevai.tn.gov.in என்ற தமிழ்நாடு இ-சேவை தளத்தின் மூலம் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். சுகாதார சான்றிதழுக்கான ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சுய உறுதிமொழி சான்றிதழை பதிவேற்றம் செய்தவுடன், சுகாதாரச் சான்றிதழ் தானாக அதற்குரிய தளத்தில் உருவாக்கம் செய்யப்படுகிறது.

சுகாதாரச் சான்றிதழ் பெற விரும்பும் அனைத்து விண்ணப்பதாரர்களும் https://tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இ-சேவை தளத்தை அணுக வேண்டும். பின்னர், விண்ணப்பதாரர்களின் விவரங்களை உள்ளீடு செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். சுகாதார ஆவணங்கள் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நபரால் சுய உறுதிமொழி பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டவுடன், சுகாதார சான்றிதழ் ஒரு வருடம் செல்லுபடியாகும் வகையில் தானாகவே உருவாக்கப்பட்டு பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு பெறப்படும் சான்றிதழை வளாகத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.

மேலும், சுகாதாரச் சான்றிதழ்களில் வெளியிடப்பட்டு உள்ள நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். எந்த நேரத்திலும் அதிகாரிகள் கள ஆய்வு செய்வார்கள். ஆய்வின்போது சுகாதார நெறிமுறைகள் கடைபிடிக்காதது தெரியவந்தால் சான்றிதழை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது.

எனவே, இனிவரும் காலங்களில் நேரிடையாக சுகாதாரச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டு தமிழ்நாடு அரசின் இ-சேவை தளத்தின் வாயிலாக மட்டுமே பெற இயலும். நேரடியாக ஆவணங்கள் மற்றும் நகல்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News