தமிழ்நாடு செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்: தனி நீதிபதி மீண்டும் உத்தரவு

Published On 2025-12-04 18:20 IST   |   Update On 2025-12-04 18:20:00 IST
  • திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
  • தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு நேற்று மாலை அவசர மனுவாக விசாரிக்கப்பட்டது.

மதுரை:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அதிகாரிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று பிற்பகலில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடம் வக்கீல் அருண் சுவாமிநாதன் உள்ளிட்டோர் முறையிட்டனர்.

அதன்பேரில் நேற்று மாலை இந்த வழக்கு அவசர மனுவாக விசாரிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் ராம ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். அவர்களுக்கு மதுரை ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய பாதுகாப்பு படையினர் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோவில் செயல் அலுவலர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நேற்று மதுரை ஐகோர்ட் நிர்வாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் முறையிடப்பட்டது.

அதன் பேரில் இன்று நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் இந்த வழக்கு காலை 10.30 மணி அளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபத்தை தனி நபர்கள் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. திருப்பரங்குன்றம் மலை விவகாரம் சம்பந்தமாக ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த மலையில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக தனி நீதிபதி எந்த உத்தரவையும் பிறப்பிக்க அதிகாரம் இல்லை. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யவேண்டும். தனி நீதிபதியின் உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. சட்டத்தை மீறி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

தொடர்ந்து மனுதாரர் தரப்பில் கூறுகையில், ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றாததால் தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தோம் என்றனர்.

அதன்பின், நீதிபதிகள் கூறுகையில், இந்த வழக்கு நேற்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு வந்தபோதும் கோவில் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டாமா? ஒரு மதத்தின் நம்பிக்கையை தடுப்பது எப்படி சமூக நல்லிணக்கம் ஆகும். திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன்? எப்போது பிறப்பிக்கப்பட்டது? அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் யாருக்கும் பாதிப்பில்லாமல் தீபம் ஏற்றுவதை ஒரு தரப்பினர் ஏன் தடுக்க வேண்டும். மத நல்லிணக்கம் என்பது ஒருவரை, மற்றொருவர் எதுவும் செய்யவிடாமல் தடுப்பதில் அல்ல. இருதரப்பும் இணைந்து தங்களுக்கானவற்றை செய்து கொள்வதிலும், செய்ய அனுமதிப்பிதிலும் தான் உள்ளது. இந்த வழக்கின் உத்தரவு இன்றே பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்ய மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிப்பார் எனவும் தெரிவித்தனர்

இந்நிலையில், 144 தடை உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இன்று மாலையே திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். மனுதாரர் 10 பேருடன் சென்று தீபமேற்ற பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாதுகாப்பு தராவிடில் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும். நாளை காலை 10 மணிக்கு காவல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News