தமிழ்நாடு செய்திகள்

சட்டவிரோத மது விற்பனை: உரிய நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு உதவி கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவு

Published On 2025-08-07 15:07 IST   |   Update On 2025-08-07 15:07:00 IST
  • பெரும்பாலான பார்கள் அதிகாலை 3 மணி வரை செயல்படுகிறது.
  • ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவை வழங்க இயலாது என குறிப்பிட்டனர்.

மதுரை:

திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சியின் பிரதான சாலைகளில் எப்.எல். 2 உரிமம் பெற்ற மதுக்கடைகள் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வரும் எப்.எல். 2 பார்கள் தொடர்பாக ஆய்வு செய்வது அவசியம். எப்.எல். 2 உரிமம் பெற்ற பார்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி உண்டு. ஆனால் பெரும்பாலான பார்கள் அதிகாலை 3 மணி வரை செயல்படுகிறது.

அதோடு அங்கு சட்ட விரோதமான நடவடிக்கை களும் நடைபெறுவதால் ஏராளமான புகார்கள் வருகின்றன. இருப்பினும் காவல்துறையினர் மனமகிழ் மன்றங்களிடம் மாதந் தோறும் மாமுல் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே எப்.எல். 2 உரிமம் பெற்ற பார்களில், ஐ.எம்.எப்.எல் மது வகைகளை உறுப்பினர் அல்லாதவருக்கு விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், மரிய கிளாட் அமர்வு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவை வழங்க இயலாது என குறிப்பிட்டனர்.

மனுதாரர் தரப்பில், மது விற்பனையின் போது ரசீது வழங்குவதில்லை. சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என குறிப்பிட்டார்

அதையடுத்து நீதிபதிகள், "சட்டவிரோதமாக மது விற்பனை யாருக்கு செய்யப்பட்டாலும் அது குற்றம். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மதுவிலக்கு துறையின் உதவி ஆணையர் நடவடிக்கை எடுப்பதில்லை என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆகவே திருச்சி மாவட்டத்தில் எப்.எல். 2 உரிமம் பெற்ற பார்களில் சட்டவிரோத மது விற்பனை செய்வது தொடர்பான புகார் குறித்து திருச்சி மாவட்ட மதுவிலக்கு துறையின் உதவி ஆணையர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

Similar News