தமிழ்நாடு செய்திகள்

கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி

Published On 2025-08-05 17:16 IST   |   Update On 2025-08-05 17:16:00 IST
  • கலைஞர் பல்கலைக் கழக மசோதா கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
  • துணை வேந்தர் நியமனம், யுஜிசி விதிகள் தொடர்பான வழக்குகளை காரணமாக காட்டி அனுப்பியதாக தகவல்.

கலைஞர் பல்கலைக் கழக மசோதா கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஆளுநர் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்த நிலையில், கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பியுள்ளார்.

துணை வேந்தர் நியமனம், யுஜிசி விதிகள் தொடர்பான வழக்குகளை காரணமாக காட்டி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக,

சட்டப்பேரவையில் கடந்த ஏப்.24-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் 'கலைஞர் பல்கலைக்கழகம்' உருவாக்க வேண்டும் என்று, அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளின் சட்டப்பேரவை கட்சித் தலைவர்களும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்தனர்.

இதையடுத்து, கும்பகோணம் மாவட்டத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் தரும் வகையில் சட்டப்பேரவையில் கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார்.

இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநில முதல்வர் இருப்பார். மேலும், பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், பட்டமளிப்பு விழா உள்ளிட்டவற்றில் தலைமை வகிப்பவராகவும் இருப்பார். வேந்தரின் முன் அனுமதியின்றி, கவுரவப் பட்டங்கள் வழங்க இயலாது. பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சர் செயல்படுவார்.

துணைவேந்தர் தேடல் குழுவில், வேந்தர் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, அரசு பிரதிநிதியாக ஒரு கல்வியாளர் அல்லது முதன்மைச் செயலர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியும், சிண்டிகேட் பிரதிநிதியாக, மாநில அல்லது மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட கல்வியாளர்கள் இடம் பெறுவர்.

குழுவால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படும் மூவர் பட்டியலில் இருந்து, துணைவேந்தரை வேந்தர் நியமிப்பார் உள்ளிட்ட ஷரத்துக்கள் மசோதாவில் இருந்தன.

இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மேற்கண்ட மசோதாவை ஜனாதிபதிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார்.

Tags:    

Similar News